உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் தங்கட்கிழமை வர்த்தகத்தில் ரத்தக்களறியாகியுள்ளது. எலான் மஸ்க் - டிரம்ப் மத்தியிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
எலான் மஸ்க் - டிரம்ப் மத்தியிலான கருத்து வேறுபாடு ஏற்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து டெஸ்லா பங்குகள் சரிந்து வரும் வேளையில், டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்கின் புதிய அரசியல் கட்சி துவங்குவது தொடர்பான அறிவிப்பு பங்குச்சந்தையில் கடுமையான சரிவை கொடுத்துள்ளது.

எலான் மஸ்க் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தனது திட்டத்தை அறிவித்த பின்னர், இந்நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு அவரின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணக்கிட்டு முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் டெஸ்லா பங்குகளை முதலீட்டாளர்கள் அடுத்தடுத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இன்றைய சரிவின் மூலம் டெஸ்லா பங்குகள் சுமார் 70 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது.
இதன் விளைவாக, டெஸ்லா பங்குகளில் ஷாட் செல்லர் வர்த்தகர்கள் திங்கட்கிழமை சுமார் 1.4 பில்லியன் டாலர் லாபத்தை பெற உள்ளனர். டெஸ்லாவின் பங்குகள், எலான் மஸ்கின் அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கட்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் 7.5% சரிந்து, ஒரு பங்கின் விலை 291.50 டாலராகக் குறைந்தது. இதேபோல் ஜூன் 5ஆம் தேதி டெஸ்லா ஷாட் செல்லர் வர்த்தகர்கள் 4 பில்லியன் டாலர் வரையிலான லாபத்தை பெற்றனர்.
எலான் மஸ்கின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான மோதல், டெஸ்லா-வின் எதிர்காலத்தை நாளுக்கு நாள் மோசமாக்கி வருகிறது. டிரம்பின் வரி விதிப்பு மற்றும் OBB மசோதா குறித்து எலான் மஸ்க் டிவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, ஜூன் 5 அன்று டெஸ்லாவின் பங்குகள் மிகப்பெரிய ஒரு நாள் சரிவைச் சந்தித்து, சந்தை மதிப்பில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் டெஸ்லா பங்கு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து 288.77 டாலர் வரையில் குறைந்துள்ளது, கடந்த 5 நாட்களில் 8.85 சதவீதமும், ஒரு மாதத்தில் 5.61 சதவீதமும், 6 மாதத்தில் 26.14 சதவீதமும், 2025ஆம் ஆண்டில் 23.04 சதவீதமும் சரிந்துள்ளது.
எலான் மஸ்கின் அரசியலில் இறங்கும் முடிவு, டெஸ்லாவின் தலைமை நிர்வாகியாக அவரது கவனம் மற்றும் அர்ப்பணிப்பு குறையும் என முதலீட்டாளர்களிடையே அச்சம் உள்ளது. இதேபோல் டிரம்ப் மற்றும் டிரம்ப் நிர்வாகம் எலான் மஸ்க் மீதும், அவருடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்ற அச்சமும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications