அமெரிக்காவில் துவங்கி உலகளவில் பிரபலமான டெஸ்லா நிறுவனம், மின்சாரக் கார்களின் உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் (Elon Musk). இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸில் அமைந்துள்ளது. கடந்த 2024-25ஆம் காலாண்டுகளில் டெஸ்லாவின் விற்பனை வளர்ச்சி வெகுவாக சரிவை சந்தித்துள்ளது. இதற்கு உலக சந்தையில் நிலவும் போட்டி தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், டெஸ்லா சில மாடல்களின் விலையை குறைத்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் தற்போது, "Fully Autonomous Cars" எனப்படும், மனிதரின் உதவி இன்றி இயக்கக்கூடிய கார்கள் உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. இதன் மூலம், சாலை பாதுகாப்பு மேம்படும், பயணிகள் வசதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத் துறை மட்டுமின்றி வீட்டிற்கு தேவையான சோலார் பேனல்கள் போன்ற சில தயாரிப்புகளையும் மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் படிக்கட்டாக, மும்பையில் தனது ஷோரூமை விரைவில் திறக்க உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பின் உலகிலேயே மூன்றாவது பெரிய சந்தையாக திகழ்கிறது. இந்த சூழலில் ஜூலை 15ஆம் தேதி மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூம் திறக்கப்படுகிறது.
இந்த ஷோரூம், மும்பையின் பிரபல வணிக மையமான பாண்ட்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் (BKC) பகுதியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூம் அருகில், சுமார் 4,000 சதுர அடியில் அமைந்துள்ளது. டெஸ்லா வாகனங்களை நேரடியாக பார்வையிட்டு ஆர்டர் செய்ய முடியும். வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் ப்ரீமியம் சேவைகள் வழங்கப்படும். இது, இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புதிய திருப்புமுனை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டெஸ்லா தனது விற்பனை மற்றும் சேவை மையங்களை டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களிடம் மின்சார வாகனங்களின் மீது நம்பிக்கையை அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மும்பையில் திறக்கவுள்ள தனது முதல் ஷோரூமுக்காக, டெஸ்லா நிறுவனம் மாதம் ரூ.35 லட்சம் வாடகை செலுத்தும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா இந்தியாவில் விற்பனை செய்யும் கார்கள், நேரடியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எப்போது செயல்படும் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. மும்பைக்கு அடுத்தபடியாக, டெஸ்லா தனது இரண்டாவது ஷோரூமை டெல்லியின் ஏரோசிட்டி பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது, வட இந்தியா மற்றும் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகமாக தாமதமாகி வந்தது. இதற்குக் காரணமாக, இந்தியாவில் பொருள்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட உயர் சுங்க வரி அமைந்தது. இந்த சூழ்நிலையில், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் பல்வேறு நேரங்களில், "இறக்குமதி வரி குறையாமல் இந்திய சந்தையில் நாங்கள் நுழைய முடியாது" எனத் தெளிவாக கூறியிருந்தார்.
இப்போது, இந்திய அரசு EV துறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சுமார் 70 சதவீதத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்களுக்கு இந்த வரி தளர்வுகள் பொருந்தும். இதன் மூலம், இந்தியாவில் விற்பனை செய்யும் டெஸ்லா மாடல்களின் ஆரம்ப விலை சற்றே குறைவடையும் வாய்ப்பு உள்ளது. இந்த வரி தளர்வுகளுடன், டெஸ்லா இந்தியாவில் தனது Model Y மற்றும் Model 3 போன்ற பிரபலமான மின்சார கார்கள் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications