உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ், இந்தியாவில் சுமார் 2 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டில் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைக்கும் திட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க இம்மாதம் இடத்தைத் தேர்வு செய்ய டெஸ்லா நிறுவனம் ஒரு சிறப்பு குழுவை இந்தியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த மாதம் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கைக்கு ஒப்புதல் நிலையில், டெஸ்லாவுக்கு இது ஜாக்பாட் ஆக மாறியது. இதேவேளையில் எலான் மஸ்க்-ன் மெக்சிகோ திட்டத்திற்குப் பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் இந்தியா மட்டும் தான் எலான் மஸ்கிர்கு ஒரே போக்கிடம்.
இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யவும், இத்துறையில் உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரவும் மத்திய அரசின் EV கொள்கையும், இக்கொள்கையின் கீழ் அளிக்கப்பட்ட வரிச் சலுகை மூலம் இந்தியாவைத் தேடி ஓடி வந்துள்ளது டெஸ்லா.
அமெரிக்காவிலிருந்து டெஸ்லா நிறுவனம் ஏப்ரல் மாத இறுதியில் ஒரு குழுவை இந்தியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இந்தியாவில் ஆட்டோமொபைல் ஹப்களாக இருக்கும் மாநிலங்களில் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுகளைச் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா-வின் முதல் கட்ட ஆய்வில் டெஸ்லா மேற்கிந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தையும், தென்னிந்தியாவில் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் முக்கிய தேர்வாகக் கொண்டு உள்ளது. அமெரிக்காவில் இருந்து வரும் குழு 3 மாநிலங்களிலும் இடத்தை தேடவும், மாநில அரசுடன் சலுகைகள் குறித்துப் பேசவும் உள்ளது.
எலான் மஸ்க் நிறுவனத்தின் கவனம் இந்த மூன்று மாநிலங்களின் மீதே இருக்கும், ஏனெனில் இந்த மாநிலங்கள் துறைமுகங்களைக் கொண்டுள்ளன, இதன் மூலம் கார்களை எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்வது என்பது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். இந்த மாத தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெஸ்லா குழுவின் வருகை மூலம் கூடுதல் கவனத்தைப் பெறும்.
டெஸ்லா நிறுவனம், புதிய ஆலையில் தனது தற்போதைய மாடல்களை விட குறைந்த விலையுள்ள அதாவது 30,000 டாலருக்குக் குறைவான சிறிய காரை உற்பத்தி செய்வதைத் திட்டமிட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் கூறுகிறார். அதாவது டெஸ்லாவின் நீண்ட கால கனவான பட்ஜெட் கார் இந்தியாவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
இந்த மாடலை இந்தியாவில் விற்பனை செய்வதோடு, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆபிரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். இதற்காகவே ஏற்றுமதி தளம் கொண்ட மாநிலத்தைத் தேடி வருகிறது டெஸ்லா.


Click it and Unblock the Notifications