அமெரிக்க எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா, இந்தியா சந்தையில் நுழைய தயாராக இருப்பதால், கார் இறக்குமதிக்கான இந்தியாவின் வரிகளை குறைக்க அமெரிக்கா மறைமுகமாக வலியுறுத்தி வருகிறது. இந்தியா தற்போது 110% வரி விதித்து வெளிநாட்டு கார்களை உள்நாட்டில் விற்பனை செய்து வரும் வேளையில், அமெரிக்காவின் டிரம்ப் அரசு இதை குறைக்க முயற்சி செய்து வருகிறது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இந்த வரிகளை உலகின் மிக உயர்ந்த வரிகளில் ஒன்றாக விமர்சித்துள்ளார். டிரம்ப்-ம் தனது 2வது ஆட்சியின் முதல் நாடாளுமன்ற பேச்சில் இந்தியா 100 சதவீதத்திற்கும் அதிகமாக வரி விதிப்பதை பற்றி விமர்சனம் செய்து பேசினார்.

அமெரிக்கா, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் கார் இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்து வருகிறது. ஆனால், இந்திய அரசு உள்நாட்டு கார் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வரிகளை குறைக்க தயங்குகிறது.
இந்தியாவின் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவதும் மட்டும் அல்லாமல் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரெசிப்ரோக்கல் வரி விதிக்க உள்ளதாகவும் கூறுகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிகழ்த்திய உரையில் அவர் எச்சரித்தார்.
கடந்த மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்திப்பின் பின்னர், 2025 இல் வணிக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் கோரிக்கைக்கு இந்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் அணுகியுள்ளது. இந்தியா உள்நாட்டு ஆட்டோமொபைல் தொழில்துறையை பாதிக்காத வகையில் இந்த மாற்றங்களை செய்வதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்கிறது.
கடந்த மாதம், இந்திய அரசு உள்நாட்டு கார் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாத்தியமான வரி குறைப்புகள் குறித்து விவாதித்தது. உயர் ரக மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 30 பொருட்களின் இறக்குமதி வரிகளை இந்தியா சமீபத்தில் குறைத்தது.
ஆடம்பர கார்கள் மீதான கூடுதல் கட்டணங்களை மறுபரிசீலனை செய்யும் திட்டத்தையும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுகள், இந்தியாவின் வணிக மற்றும் வரி கொள்கையில் ஒரு மென்மையான மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.
இந்திய அரசு இறக்குமதி வரிகளை திடீரென பூஜ்ஜியமாகக் குறைக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், வரிகளை குறைத்து, டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் நுழைய உதவலாம். இதற்காக, டெஸ்லா இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை தொடங்க வேண்டும்.
இந்தியாவில் உற்பத்தி செய்தால், அதிக இறக்குமதி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தி, உற்பத்தி செயல்பாடுகளை இந்தியாவிற்குள் கொண்டுவரும் திட்டம் அவசியம்.
இந்தியாவில் உள்ள "Make in India" திட்டத்தின் கீழ் டெஸ்லா உற்பத்தி செய்ய விரும்புகிறது. வரிகளை குறைத்தால், டெஸ்லா இந்தியாவில் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்பனை செய்ய முடியும். அரசு எலக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி மேற்கொண்டு வருகிறது. இந்த விவாதங்கள் வரவிருக்கும் இந்தியா-அமெரிக்க வணிக பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications