எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனையில் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. 2025 ஆம் நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் டெஸ்லா கார்களின் உலகளாவிய விற்பனை 336,681 வாகனங்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 387,000 ஆக இருந்தது.
கடந்த காலாண்டையும், இந்த காலாண்டையும் ஒப்பிடும்போது டெஸ்லா கார் விற்பனை சுமார் 13 சதவீதம் குறைந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க கார் விலையை குறைத்துள்ளது, ஜீரோ வட்டி விகிதத்தில் கடன் மற்றும் பல்வேறு விளம்பரங்கள் என பல முயற்சிகளை அறிவித்தும் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது.

டெஸ்லா கார் விற்பனை குறைய பல காரணங்கள் உள்ளது. அமெரிக்கா உட்பட உலகில் பல நாடுகளில் டெஸ்லாவுக்கு போட்டியாக பல நிறுவனங்கள் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதேபோல் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கார்கள் பழையதாகி காலாவதியான நிலையில் பல கார்கள் டெஸ்லாவிடம் உள்ளது, மேலும் மக்களின் விருப்பம் வேகமாக மாறிவருகிறது இதுவும் அதன் விற்பனை குறைய முக்கிய காரணமாக உள்ளது.
ஃபேக்ட்ஸெட் நடத்திய ஆய்வில் சுமார் 408,000 வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என்று கணித்திருந்தனர், ஆனால் டெஸ்லா இக்காலாண்டில் 336,681 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சந்தை கணிப்புக்கும் அதன் உண்மையான செயல்திறனக்கும் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டுகிறது.
பிஒய்டி, ஃபோர்டு மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளன, இது நுகர்வோருக்கு போட்டி மற்றும் விலை மட்டத்தில் அதிகப்படியான சாய்ஸை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் பெரும்பாலான கார்கள் ஒரே செயல்திறனை காட்டும் காரணத்தால் சிறிய அளவிலான விலை வித்தியாசமும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்படியிருக்கையில் டெஸ்லாவின் ஆதிக்கம் எளிதாக உடைக்கப்பட்டு வருகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் டெஸ்லாவின் விற்பனை மார்ச் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்து, 2021 முதல் இரு நாடுகளிலும் மிகக் குறைந்த முதல் காலாண்டு விற்பனை அளவீட்டை எட்டியது. இந்த விற்பனை சரிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் நடந்து வரும் "டெஸ்லா டேக் டவுன்" போராட்டங்களுக்கு மத்தியல் நடக்கிறது.
ஐரோப்பாவில் வலதுசாரி அரசியல் அமைப்புகளுக்கு எலான் மஸ்க் ஆதரவளிப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் டெஸ்லா மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications