திருப்பூர்: மெட்ரோ நகரங்களை மட்டுமே ஆட்கொண்டு இருந்த மால் கலாச்சாரம் தற்போது சிறு நகரங்களுக்குப் படையெடுக்கத் துவங்கியுள்ளது. மால் என்றால் சென்னை, கோவை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் மட்டும் தான் இருக்கும் என்ற நிலை மலையேறிவிட்டது.
ஷாப்பிங் பிரியர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, திருப்பூரின் முதல் ஷாப்பிங் மால், ஆர்னோதயா மால், விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இது, திருப்பூர் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் 5 ஸ்டார் நட்சத்திர ஷாப்பிங் அனுபவத்தை அளிக்க சுமார் 2.6 லட்சம் சதுரடியில் மிகவும் பிரம்மாண்டமாக அமைய உள்ளது.

சமீபத்தில் கோயம்புத்தூரில் லூலூ மால் திறக்கப்பட்டதில் இருந்து கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து பல பகுதிகளில் மால் கட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
மால் என்பது வர்த்தகம், பொருளாதாரம் நிறைந்த இடத்தில் தான் அமைக்கப்படும், காரணம் மால்களில் வாடகை மற்றும் செலவுகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் அதற்கு ஏற்றார் போல் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கும். இதனால் இதை நுகரும் மக்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே மால் அமைக்கப்படும்.
திருப்பூரில் திறக்கப்பட உள்ள ஆர்னோதயா மாலில் பல்வேறு பிரபலமான கடைகள் இடம் பெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், திருப்பூர் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக இருக்கும். தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் களஞ்சியம், ஏற்றுமதி துறையில் பேஸ்மென்ட் என பல பெருமைகளைக் கொண்ட திருப்பூர் நகரின் பல்லடம் பகுதிக்கு அருகில் இந்த மால் அமைக்கப்பட உள்ளது.
5 திரையரங்க Multiplex (2 PLF திரையரங்குகள் உட்பட): திரைப்பட ஆர்வலர்களுக்கும் இந்த ஷாப்பிங் மால் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மொத்தம் 5 திரையரங்குகளைக் கொண்ட Multiplex திரையரங்க வசதி இங்கு வர உள்ளது. இதில், 2 திரையரங்குகள் PLF (Premium Large Format) திரையரங்குகளாக இருக்கும். இதன் மூலம், பார்வையாளர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவம் கிடைக்கும்.
300 இருக்கைகள் கொண்ட புட் கோர்ட்: ஷாப்பிங் செய்த பின்னர் பசியாற புட் கோர்ட் அவசியம், அப்போது தான் ஷாப்பிங் அனுபவம் முழுமை அடையும். ஆர்னோதயா மாலில் 300 இருக்கைகள் கொண்ட புட் கோர்ட் இருக்கும். இதில் பல்வேறு வகையான உணவகங்கள் இடம் பெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கேட்டிங் ரிங்க் மற்றும் டர்ஃப் கோர்ட்: பொழுதுபோக்கிற்காகவும் இந்த ஷாப்பிங் மாலில் 200 மீட்டர் நீளமுள்ள சர்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் ரிங்க் அமைய உள்ளது. இதனைத் தவிர, 2 டர்ஃப் கோர்ட்டுகளும் (Turf Court) இருக்கும். இது விளையாட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

பெரிய பார்க்கிங் வசதி: இதுபோன்ற பெரிய மால்களில் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இட வசதி இருப்பது மிகவும் முக்கியம். அதேபோல் இது மால் உரிமையாளர்களுக்கும் முக்கிய வருமானம் ஈட்டும் வழியாக உள்ளது. ஆர்னோதயா மாலில் 800 கார்கள் மற்றும் 600 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இருக்கும்.
திறப்பு தேதி குறித்த குழப்பம்: ஆர்னோதயா மால் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், இதன் உறுதியான விபரம் தெரியவில்லை.
திருப்பூர் மக்களின் ஆர்வம்: திருப்பூரில் இதுவரை எந்த ஷாப்பிங் மால்களும் இல்லை. எனவே, ஆர்னோதயா மால் திறக்கப்படுவதைத் திருப்பூர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த ஷாப்பிங் மால் திறக்கப்பட்ட பிறகு, திருப்பூர் மக்களின் விருப்பமான Hang Out ஸ்பாட் ஆக மாறும்.


Click it and Unblock the Notifications