டெல்லி: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ விசா வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இ விசா வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
தாய்லாந்து நாட்டவர்கள் அல்லாதவர்கள் அனைத்து விசா வகைகளுக்கும் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நேரடியாகவோ அல்லது விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா கட்டணம் செலுத்திய 14 நாட்களுக்குள் இ விசா வழங்கப்படும் என தாய்லாந்து தூதரகம் கூறியுள்ளது.

மேலும் சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக தாய்லாந்து வரும் இந்தியர்கள் 60 நாட்கள் விசா என்று தங்கிக் கொள்ளும் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த 60 நாட்கள் விசா இன்றி தங்கும் சலுகையை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தாய்லாந்து தூதரகம் அறிவித்துள்ளது.
இ விசா திட்டத்தினை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தூதரகம் அல்லது துணை தூதரகங்களில் ஆப்லைன் முறையில் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் இந்த விசா கட்டணங்கள் ஒருபோதும் திரும்ப கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின்னர் ஈ விசா வழங்கப்படும் என தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா (visa-on-arrival) வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான சுற்றுலா தளமாக தாய்லாந்து மாறியிருக்கிறது. பாங்காக், பட்டாயா, சியான்மாய், புகெட் ஆகிய தாய்லாந்தை சேர்ந்த பகுதிகளுக்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா செல்கின்றனர். குறிப்பாக திருமணத்திற்கான இடமாக தாய்லாந்தை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
2019 ஆம் ஆண்டில் மட்டும் தாய்லாந்து நாட்டிற்கு 20 லட்சம் இந்தியர்கள் சுற்றுலாவுக்கு சென்றிருந்தனர். கொரோனா காலத்தில் இது குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறதாம். முன்னதாக ஒரு மாதத்திற்கு முன்பு தான் தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்கள் விசா இல்லாமலேயே தங்கள் நாட்டிற்கு வருகை தரலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. நவம்பர் 11ஆம் தேதி உடன் இந்த சலுகை முடிவடைந்த நிலையில் மீண்டும் அது நீட்டிக்கப்பட்டது.
விசா இல்லாமல் 60 நாட்கள் தங்கலாம் என்ற சலுகை மூலம் 2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 16 லட்சம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications