சர்வதேச அளவில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், வர்த்தகத்தையும், பணவீக்க அளவீடுகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்து வருகிறது. ஏற்கனவே பிரிட்டன் மோமசான நிதி நிலையில் இருக்கும் வேளையில் புதிதாகத் தாய்லாந்து ரெசிஷனில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து மக்களின் குடும்பக் கடன் அதிக அளவில் இருப்பதால், அந்நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்று துணை நிதி அமைச்சர் திங்களன்று வெளிப்படையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தாய்லாந்தின் பென்ச்மார்க் வட்டி விகிதங்களைக் குறைக்க அந்நாட்டின் மத்திய வங்கிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டின் துணை நிதியமைச்சர் Julapun Amornvivat கூறுகையில், தற்போது நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம்
2.50% என்ற பத்தாண்டுக் கால உயர்வில் இருக்கிறது. இதனால் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறும் மத்திய வங்கியின் நாணய கொள்கை மதிப்பாய்வில் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.
வட்டி விகிதம் குறைப்பது மூலம் மக்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான கடன் செலவுகளைக் குறைக்க உதவும் என்று துணை நிதியமைச்சர் Julapun Amornvivat தெரிவித்தார். தற்போது இருக்கும் அதிகப்படியான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும், இந்த வட்டியில் மக்களால் வாழ முடியாது எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் தாய்லாந்து நாட்டின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறுகையில், தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் தாய்லாந்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைக்குமாறு மத்திய வங்கியை வலியுறுத்தினார்.
தாய்லாந்து நாட்டின் பணவீக்கம் அளவு எதிர்மறை பணவீக்கமாக (மைனஸ் அளவில்) இருக்கும் வேளையிலும், வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருப்பதால், அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் தாய்லாந்து கவர்னர் Sethaput Suthiwartnarueput கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளார்.
ஆனால் Sethaput Suthiwartnarueput கூறுகையில் தற்போது நாட்டின் நாணய கொள்கை நியூட்ரல் அளவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2022 முதல் சுமார் 200 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 2.50 சதவீதமாக உள்ளது.
2022ல் தாய்லாந்து பொருளாதாரம் 2.7 சதவீதமாக இருந்த நிலையில், 2023ல் 1.8 சதவீதமாகக் குறைந்து கணக்கிடப்பட்டு உள்ளது. பணவீக்கம் மைனஸ் அளவில் இருக்கும் வேளையில், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் பொருளாதாரம் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்வதாகத் தாய்லாந்து அரசு தரப்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications