இன்றுள்ள காலத்தில் பணத்தை சேமிப்பது பெரும்பாடாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கம், குறைந்த சம்பளம், வேலை இழப்புக்களுக்கு மத்தியில் சிக்கி மக்கள் திண்டாடி வருகின்றன.
இதில் பிள்ளைகள் படிப்புச் செலவுகள், தொடங்கி எதிர்பாராத செலவுகளை சமாளிக்கவே மாதம் சராசரியாக ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை வருமானம் ஈட்ட வேண்டிய நிலை உள்ளது. அப்படியிருக்க எப்படி சேமிப்பது.
நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் அதில் செலவுகள் போக சேமிக்கவும் ஒதுக்க வேண்டும். அதற்கு இந்த 50/25/25 விதி உங்களுக்கு உதவியாக இருக்கும். அதென்னப்பா பணத்தை சேமிக்க இப்படியொரு விதியான்னு கேட்டா, ஆமாங்க அதப்பத்தி இங்கு விரிவாக பார்க்கலாம்.
சம்பளத்தை நிர்வகிக்கும் முறை!
உதாரணமாக நீங்கள் மாதம் ரூ.80,000 சம்பளம் வாங்கும் நபரெனில் 50/25/25 விதி -யின் படி, ரூ.40,000 (50%) வரை உங்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளான வீட்டு வாடகை, வங்கிக் கடன், பெட்ரோல், டீசல் செலவு, போக்குவரத்து செலவு, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி செலவுகள் போன்ற அத்யாவசிய தேவைகளுக்கு ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
25% தொகை
அடுத்ததாக மீதமுள்ள 40,000 ரூபாயில் ரூ.20,000 (25%) உங்கள் ஷாப்பிங், டூர், இன்னும் பல அத்தியாவசியமற்ற செலவுகளுக்கு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் அநாவசியமான செலவுகளுக்காக தொகை ரூ.20,000 தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மீதமுள்ள 25% தொகை
இறுதியாக மீதமுள்ள 20,000 ரூபாயை(25%) கட்டாயம் உங்கள் சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும். இந்த மீதமுள்ள 20,000 ரூபாயை உங்கள் வருங்கால வைப்பு நிதி, தங்க முதலீடுகள், அல்லது வீடு வாங்குவது போன்ற நீண்டகால சேமிப்புக்காக வைக்க வேண்டும். மேலும் இந்த நிதியானது உங்களின் எமர்ஜென்சி பணமாகவும் பயன்படுத்த முடியும்.
திடீர் நிதி தேவை
திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகள், கார் பழுது அல்லது வேறு ஏதேனும் அவசர காலங்களில் இப்பணம் உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஒரு ஐடியா மட்டுமே!
இந்த 50/25/25 என்பது உங்கள் பணத்தை சேமிக்க உதவும் ஒரு வழிகாட்டி மட்டுமே. இந்த விதி ஒருவருக்கொருவர் வேறுபடும். இதில் கூறப்பட்ட செலவுகளில் உங்களுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் கடன்கள் இருந்தால் அது ஒதுக்கப்பட வேண்டிய தொகையைத் தாண்டிச் செல்லலாம். அதனால் நீங்கள் சேமிக்கும் தொகையின் அளவு குறையும்.
மாத கமிட்மெண்ட்
அதேசமயம் உங்களுக்கு மாத கமிட்மெண்டில் பெரிய அளவு தொகை செலவாகாமல் இருந்தால் நீங்கள் இன்னும் கூடுதல் பணத்தைக் கூட சேமிக்கலாம். அதனால் உங்களின் வருமானத்திற்கேற்ப இவ்விதியை உங்களுக்கு எப்படி உதவும் என நீங்கள் கணக்கிட்டு பார்ப்பதும் நல்லது.


Click it and Unblock the Notifications