மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) சமீபத்தில் ChatGPT பயனர்களின் மூளையை ஆராய்ந்து உலகின் முதல் ஆய்வை முடித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. நான்கு மாதங்களுக்கு, இந்த ஆய்வில் பங்கேற்ற நபர்களின் மூளைகள் ChatGPT-ஐ பயன்படுத்தும் போது ஸ்கேன் செய்யப்பட்டன.
இந்த ஆய்வில், 83% பயனர்கள் சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை கூட நினைவில் வைக்க முடியவில்லை, ஆனால் AI இல்லாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என்பதை புட்டு புட்டு வைத்துள்ளது. இது AI பயன்பாடு மனித நினைவாற்றலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
எம்ஐடி மீடியா லேப் ஆராய்ச்சி விஞ்ஞானி நடாலியா கோஸ்மினா (Nataliya Kos'myna) தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

AI பயன்பாட்டால் மூளை செயல்பாடு குறைவு:
MIT ஆய்வு குறித்து துல்சா பல்கலைக்கழகத்தின் டேட்டா சயின்டிஸ்ட் முகமது ஓ மாலிக் லின்கிடுஇன் தளத்தில் செய்த பதவில், ChatGPT-ஐ பயன்படுத்துபவர்களின் மூளை செயல்பாடு 47% குறைந்துள்ளது, மேலும் இந்த குறைந்த ஈடுபாடு அவர்கள் AI-ஐ நிறுத்திய பிறகும் தொடர்ந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற மக்களின் சாட்ஜிபிடி பயன்படுத்தி எழுத்தும் கன்டென்ட் தொழில்நுட்ப ரீதியாக சரியாக இருந்தாலும், கல்வியாளர்கள் அதை இயந்திரம் போன்றதாகவும் ஆழம் இல்லாததாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ChatGPT பயன்படுத்துவோர் தங்கள் பணிகளை 60% வேகமாக முடித்தாலும், பணிகளை கற்கும் செயல்முறையில் தேவையான மனதளவு முயற்சி 32% குறைந்துள்ளது. இது AI தொழில்நுட்பத்தின் வேகம் மனித சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை MIT ஆய்வு புரிந்துகொள்ள உதவுகிறது என தெரிவித்தார்.
முக்கிய விபரம்:
ஆய்வில் ஆர்வமூட்டும் ஒரு கண்டுபிடிப்பு என்னவென்றால், AI உதவி இல்லாமல் பணியை தொடங்கி, பின்னர் ஏஐ பயன்படுத்தியவர்களின் மூளை சிறப்பாக செயல்பட்டதாகவும், பணியில் மேம்பட்ட திறனை காட்டியதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்கள் வலுவான நினைவாற்றல், அதிக மூளை செயல்பாடு மற்றும் அதிகப்படியான செயல்திறனை காட்டினர்.
இந்த ஆய்வின் முடிவில் AI சேவையை ஒரு சப்போர்ட் கருவியாக பயன்படுத்துவது மட்டுமே சிறந்த முடிவுகளை தரும் என்று காட்டுகிறது. MIT-இன் ஆரம்பக்கட்ட ஆராய்ச்சி, AI-யை எப்படி பயன்படுத்துவது என்பதை விட அதை மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்த கூடாது என்பதையும் நினைவூட்டுகிறது.
ChatGPT போன்ற கருவிகளை அதிகம் நம்பினால் எப்படி எதிர்காலத்தில் புதுமையான விஷயங்கள் உருவாக்க முடியும் என்பதே தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.
ஆனால் முக்கியமற்ற, யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய விஷயங்களை விஷயங்களை ஏஐ உதவியுடன் முடித்துவிட்டு, நம்முடைய நேரம் மற்றும் திறனை ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்ய செலவிட்டால் நம்முடைய திறனும் அதிகரிக்கும், அதேவேளையில் புதிய கண்டுப்பிடிப்புகளும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications