சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் அறிவுரைகளும், ஊக்கங்களும் பின்னாளில் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடும். அப்படி இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய இரு பெரும் ஆளுமைகளின் சந்திப்பு குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
1893 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி ஜப்பானின் யோகோஹமாவில் இருந்து கனடாவின் வான்கூவர் நோக்கி ஒரு கப்பல் சென்றது. அந்த கப்பலில் இந்தியாவின் இருபெரும் ஆளுமைகள் பயணம் செய்தனர். ஒருவர் விவேகானந்தர், மற்றொருவர் ஜாம்செட்ஜி டாடா. இவர் சிகாகோவில் நடந்த தொழில்துறை கண்காட்சிக்காக சென்று கொண்டிருந்தார்.

பல்வேறு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக இவர் அடிக்கடி ஜப்பானுக்கு சென்று வரக்கூடியவர். ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திலிருந்து கனடா நாட்டின் வான் கூவர் துறைமுகத்திற்கு பசிபிக் கனடியன் ஸ்டீம் ஷிப் கம்பெனியின் சொகுசு நீராவி கப்பலான எஸ் எஸ் எக்ஸ்பிரஸ் ஆஃப் இந்தியா என்ற கப்பலில் பயணம் செய்தார்.
யதேச்சையாக அதே கப்பலில் விவேகானந்தரும் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது இருவருக்கும் இடையே ஒரு நீண்ட உரையாடல் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர் டாடா-விடம் இந்தியா முழுவதும் தன்னுடைய பயணங்களின் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். காலனித்துவ ஆட்சியின் போது இந்தியர்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்பது குறித்தும் அவர் தெரிவித்தார்.
சீனாவிற்கு தான் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கிருந்த புத்த மடாலயங்களில் பல்வேறு சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி கையெழுத்து பிரதிகளை இருந்ததை கண்டேன் எனவும் விவேகானந்தர் அந்தப் பயணத்தின் போது குறிப்பிட்டார். மேலும் விவேகானந்தர் எதிர்வரும் உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு தான் பேச இருப்பது குறித்தும் குறிப்பிட்டாராம்.
அதே வேளையில் டாடா தொழில்நுட்பத்தில் ஜப்பான் நாட்டின் அற்புதமான முன்னேற்றம் மற்றும் இந்தியாவில் எஃகு சார்ந்த ஒரு தொழிலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்தும் விவேகானந்தரிடம் விவாதித்தார்.
அப்போது இந்தியாவின் உலகின் மிகப்பெரிய தொழில்துறையின் நாடாக மாற்ற வேண்டும் என்ற தனது கனவினை டாடா எடுத்துரைத்திருக்கிறார். மேலும் இதற்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தான் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
அப்போது விவேகானந்தர் டாடாவின் தொலைநோக்குப் பார்வையை அறிந்து ஊக்கமளித்துள்ளார். இந்தியாவின் உண்மையான நம்பிக்கை அதன் சாதாரண மக்களின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என விவேகானந்தர் கூறினாராம்.
இந்த பயணத்திற்குப் பிறகு விவேகானந்தரும் டாடாவும் மீண்டும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் இவ்விருவருக்கும் இடையிலான இந்த உரையாடல் டாடாவின் மனதில் ஒரு உற்சாகத்தை எழுப்பியது. இந்த ஊக்கம் தான் அவரை 1909 ஆம் ஆண்டு டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சையின்ஸ் நிறுவ தூண்டியது.
1911ஆம் ஆண்டு இதில் ஐஐஎஸ்சி (IISc) எனப்படும் இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது உலகளவில் செயல்படும் முன்னணி ஆய்வு நிறுவனம் இதுவாகும். விவேகானந்தருக்கு பின்னாளில் தான் எழுதிய கடிதத்தில் டாடா, கப்பல் பயணத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் அதன் மூலம் தனக்கு கிடைத்த ஊக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications