டெல்லி: வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல்லுக்கு மட்டும் இது மோசமான காலம் அல்ல. ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு துறைக்கும், இது மிக மோசமான காலமாகத் தான் கருதப்படுகிறது.
அதிலும் தொலைத் தொடர்பு துறை மட்டும் அல்ல, ஆட்டோமொபைல் துறை, விமான போக்குவரத்து துறை, விவசாயம், ஸ்டீல் உள்ளிட்ட பல துறைகளுக்கும் நடப்பு ஆண்டு மிக மோசமாக உள்ளது.
எனினும் தொலைத் தொடர்பு துறையில் ஏழரைச் சனி பிடித்தாற்போல் ஒன்று போனால் ஒன்று என பிரச்சனைகள் அடுக்கடுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அடுக்கடுக்கான பிரச்சனைகள்
என்ன இந்த அடுக்கடுக்கான பிரச்சனைகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது வோடபோன் ஐடியாவும், பார்தி ஏர்டெல்லும் தான். ஏனெனில் ஏழரைச் சனியுடன் சேர்ந்து ஜென்ம சனியும் சேர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது போலும். அந்தளவுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது வோடபோனும், ஏர்டெல்லும். ஏற்கனவே நஷ்டத்தில் இருந்த இந்த இரு நிறுவனங்களும் அதள பாதாளத்திற்கே சென்று விட்டன என்றால் அது மிகையல்ல.

வாழ்வா சாவா போராட்டம்
அதிலும் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பால் இந்த நிறுவனங்களும் நிலை குலைந்து போயின. வாழ்வா? சாவா? என்ற போரட்டத்தில் துடிக்கும் இந்த நிறுவனங்களுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. எப்படி எனினும் இந்த நிறுவனங்கள் செலுத்த தொகையை செலுத்தும் போது மீண்டும் அடி வாங்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிவாரணம் இல்லையெனில் நிறுவனத்தை மூட வேண்டியது தான்
எனினும் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இந்த கட்டணங்கள் 15 - 40 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த கட்டண உயர்வானது இத்துறையினரின் நம்பிக்கையை குறைத்துள்ளது என்றே கூறலாம். உதாரணமாக அண்மையில் வோடபோன் ஐடியாவின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அரசு தொலைத் தொடர்பு துறைக்கு எதுவும் நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.

எங்கள் மீது அனுதாபம் காட்டுங்கள்
இதே பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டல், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுதாபம் காட்டுமாறும் கேட்டுக் கொண்டனர். வோடபோன் ஐடியா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே நஷ்டம் கண்டு வருவதாகவும், இது தற்போது 50,922 கோடி நஷ்டம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது பெரு நிறுவன வரலாற்றிலேயே இப்படி ஒரு நஷ்டத்தினை கண்டிருக்க முடியாது. அத்தகையதொரு பெருஇழப்பு என்றும், இது வரலாறு காணாத நஷ்டம் என்று கூறப்படுகிறது. இது தவிர மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 22,830 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

நிவாரணம் சாத்தியமற்றது
இத்துறையில் நீடித்து வரும் பிரச்சனைகளை களைந்து, அரசு நிவாரணம் வழங்குவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஏனெனில் இதே போன்று தான் ஆட்டோமொபைல் துறை, மின்சாரம், விவசாயம், விமான போக்குவரத்து துறை போன்ற மிக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் இருந்தும், இதே போன்று கோரிக்கைகள் வரலாம். ஆக அரசாங்கத்திற்கு அதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும். ஆக தொலைத் தொடர்பு துறையின் முன்னுரிமை என்பது கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இருப்பினும் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளை நிவராணத்திற்குகாக நிறுவனங்கள் சந்தித்து பேசி வருகின்றன.

மீட்பு நடவடிக்கைகள்
இத்துறை மீண்டு எழுவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தாலும், ஏஜிஆர் நிலுவைத் தொகையானது பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு பெரிய அழுத்தத்தினை கொடுக்க போகிறது. அதிலும் இந்த அழுத்தமானது இத்துறையில் மீண்டு எழும் நேரத்தில் வந்துள்ளது. எனினும் இந்த நேரத்தில் கட்டண உயர்வு, நவீனமயமாக்கல் கட்டமைப்பு என மீட்பதற்கான நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்து வருகிறது.

வளர்ச்சிக்கு தடை
எனினும் மறுபுறம் கடன் குறைப்பு, வட்டி, வரி தேய்மானம் என பலவீனமான பிரச்சனைகளும் இதே நேரத்தில் தலைதூக்குகின்றன. மேலும் தொலைத் தொடர்பு துறைக்கு உரிமக் கட்டணங்கள், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் எனத் தனது வருவாயில் செலுத்த வேண்டியிருக்கும். இவற்றை கடன் மூலம் செலுத்த முற்பட்டால், இது வளர்ச்சியில் தடையாக இருக்கும் என்றும் ஆய்வு நிறுவனமான இக்ரா மதிப்பிட்டுள்ளது.

சந்தாதாரர்களின் எண்ணிக்கை இழப்பு
ஏஜிஆர் பிரச்சனை ஓரு புறம் இருக்கட்டும், மறுபுறம் சத்தமேயில்லாமல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களையும் ஒரு புறம் இழந்து வருகின்றனர். அதுவும் ரிலையன்ஸ் ஜியோ வருக்கைக்கு பின்னர் இது மிக மோசம். இந்த நிலையில் ஏர்டெல் செப்டம்பர் 2018 - செப்டம்பர் 2019 வரையிலான காலத்தில் மட்டும் 17.96 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே காலகட்டத்தில் வோடபோன் ஐடியா 62.48 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

ஜியோ சந்தாதாரர்கள் அதிகரிப்பு
எனினும் ஜியோ இதே காலத்தில் 102.97 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை செய்துள்ளன. இதனால் அடுத்து வரும் ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு பயனருக்கான சராசரி வருவாய் அர்பு அதிகரிக்காலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகளும் இதனால் உண்டு.

வருவாய் அதிகரிக்கலாம்
கடந்த 2018 - 2019ம் ஆண்டு இத்துறையின் வருவாய் 1.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது அடுத்த 2020 - 2021ம் ஆண்டில் 1.69 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம் என கிரிசில் அறிக்கை தெரிவித்துள்ளது. இது கிட்டதட்ட 31 சதவிகித ஏற்றத்தை எதிர்பார்க்கிறது. இதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் EBITDA விகிதம் 106 சதவிகிதம் அதிகரித்து, 60,570 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மாதாந்திர கட்டணத்தில் APRU விகிதம் 116 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆபத்தில் உள்ளன
ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்கா முதலீட்டாளருக்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் 4ஜி சேவை மேம்பாடு உள்ளதால், இனி 5ஜி சேவையில் ஊடுருவல் இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல வகையான பிரச்சனைகள் இருக்கும் நிலையில் நடப்பு நிதியாண்டு மிக மோசமானதாகவே இருக்கிறது. இது அடித்த ஆண்டிலும் நீடிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஓரு வேளை அரசு இத்துறைக்கு நிவாரணம் அளித்தால் மீண்டு வரலாம்.
எப்படி எனினும் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் என்ன நடக்கின்றதென்று.