தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி ஆகியவையும் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆகியவையும் போட்டியில் உள்ளன. கட்சிகள் சார்பாக பரப்புரைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் வாக்குறுதிகளையும் அரசியல் கட்சி தலைவர்கள் அள்ளி வீச தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்காளர் திருத்த பணி நடந்தது. தமிழகத்தில் கடந்த 2025 அக்டோபரில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதனை அடுத்து வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்றது. இந்த தீவிர வாக்காளர் திருத்த பணியை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏராளமானவர்கள் தாங்கள் உரிய ஆவணம் கொடுத்தும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அப்போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 ஆகவும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 7,617 ஆகவும் உள்ளது. இதன்படி தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 74 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு 27.53லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்களெல்லாம் இடம் பெற்று இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பார்த்தால் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். எனவே இந்த தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த போவது பெண் வாக்காளர்கள் தான். இனி வரும் நாட்களில் பெண்களை குறி வைத்து அரசியல் கட்சியினர் பல வாக்குறுதிகளை அள்ளிவீச போகின்றனர்.
இதற்கிடையே பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை பின் வரக்கூடிய https://electoralsearch.eci.gov.in/ இணையதளத்திற்கு சென்று எளிமையாக தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்களுடைய EPIC நம்பரை உள்ளிட்டு எந்த மாநிலம் என்பதை உள்ளிட்டு உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் எந்த தொகுதியில் இடம் பெற்று இருக்கிறது என்ற விவரம் பார்க்கலாம்.
இல்லை என்றால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி மற்றும் மாவட்டம் , சட்டமன்ற தொகுதி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்தும் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறியலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரவழைத்தும் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பதை எளிமையாக கண்டறிந்து விட முடியும். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications