ஹாங்காங்: ஹாங்காங் பார்ப்பதற்கு பெரிய பெரிய கட்டிடங்களுடன் பிரம்மாண்டமாக காணப்படும் இந்த நகரம் பலருக்கும் நரகமாக மாறி இருக்கிறது. இங்கே மக்களின் வாழ்க்கை தரம் மிக மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹாங்காங்கில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஆனால் அதற்கு ஏற்ப உள்கட்டமைப்புகள், சுகாதார வசதி மற்றும் கல்வி உள்ளிட்டவைகள் மேம்படவில்லை. வேலைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் ஹாங்காங்கிற்கு படை எடுக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு ஒரு மோசமான வாழ்க்கையை தான் இந்த நகரம் தந்து கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் வீட்டு மனைகளே இல்லை, ஆனால் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போவதால் Coffin Homes என்ற சவப்பெட்டி வடிவிலான வீடுகள் அதிகரித்துள்ளன.
மொத்தம் 15 சதுர அடி தான் ஒரு வீட்டின் அளவே இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அண்மையில் ஹாங்காங்கில் வாழ்பவர்களின் நிலைமை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ வேகமாக பரவி வைரலானது. இது ஹாங்காங்கின் வாழ்க்கை நிலை பற்றிய பல்வேறு உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஹாங்காங்கில் வசிக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் இதுபோல 15 சதுர அடியில் மரத்தால் செய்யப்பட்ட வீட்டில் வசிக்கிறார்கள்.

கனடா நாட்டை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான பென்னி லாம், இந்த மிகச்சிறிய வீடுகளை படம் எடுத்து , டிராப்பிடு(Trapped) என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். ஒரு மிகச்சிறிய அறை அதில் ஒருவரால் மட்டுமே தாங்க முடியும் அதுவும் சவுகரியமாக தங்க முடியாது. ஒரு சிறிய மெத்தை அதில் உறங்கிக் கொள்ளலாம். இதிலேயே சிறிதாக ஒரு சமையலறையும் ஒரு கழிவறையும் இருக்கிறது. இதில் ஒருவர் மட்டுமே சென்று திரும்பி வர முடியும்.
இப்படி அட்டைப்பெட்டி போன்ற வீடுகளில் தான் ஒரே கட்டடத்தில் ஆயிரக்கணக்கான மிக நெருக்கடியான சூழலில் வாழ்கின்றனர். இந்த வீட்டில் சௌகரியமாக ஒருவரால் உறங்க கூட முடியாது என்கின்றனர். இவ்வளவு குறுகிய இடத்திற்கு வாடகை 20,000 ரூபாயாம்.

கேட்கும் போதே நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது, போதிய வெளிச்சம் இருக்காது, காற்றோட்டம் இருக்காது, பூச்சி தொல்லைகள் அதிகமாக இருக்கும் என இங்கே குடியிருப்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவ்வளவு அசவுகரியங்கள் இருந்தாலும் தங்கள் குடும்ப சூழல் மற்றும் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம், பிழைப்பு தேடி வந்துவிட்டு வெறும் கையோடு திரும்ப முடியாது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் இப்படி அட்டைப்பெட்டி போன்ற வீடுகளில் வசிக்கிறார்கள்.

Story written by: Devika


Click it and Unblock the Notifications