பெண்களுக்கு எதற்குக் கல்வி என்ற பேச்சும், அடக்குமுறையும் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பல தடைகளைத் தாண்டி படித்தது மட்டும் அல்லாமல், இன்ஜினியர் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் சில பெண்கள். இவர்களின் வெற்றி தான் இன்று ஆண்களும் பெண்களும் சமம், பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர்ந்து பல முக்கிய உயர் பதவிகளிலும் கலக்கி வருகின்றனர்.
நம் நாட்டில் இப்போது பலரும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அதில் பயணிக்க தொடங்கி விட்டனர். ஆனால் முன்பு ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் மற்றும் காலேஜுக்கு செல்லாமல் பலர் இருந்துள்ளனர். ஆனால் அப்போதே இன்ஜினியரிங் முடித்து தங்களுடைய துறையில் சிறந்து விளங்கிய பெண்களும் நம் நாட்டில் உள்ளனர். அவர்களின் சாதனை குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்களின் சாதனைகள்:
அய்யலாசோமயாஜுல லலிதா: இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் அய்யாலசோமயாஜுலா லலிதா தனது துறையில் பெரிய சாதனைப் படைத்தவர். அவருக்கு எண்ணற்ற தடைகள் இருந்தபோதிலும், லலிதாவின் மன உறுதியால் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
1940-ஆம் ஆண்டில் கல்லூரியில் முதல் மாணவியாக அனுமதிக்கப்பட்ட அவர், 1944-ஆம் ஆண்டில் மின் பொறியாளராகப் பட்டம் பெற்றார், அதன் பின் எண்ணற்ற பெண்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.
லீலாம்மா ஜார்ஜ் கோஷி: லீலாம்மா ஜார்ஜ் கோஷி 1944-ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், 19 வயதில், COE கிண்டியில் படித்தார். பட்டம் பெற்ற பிறகு பொதுப்பணித்துறையில் சேர்ந்ததால் கேரளாவின் முதல் பெண் பொறியாளர் ஆனார்.
இங்கிலாந்தில் தனது கல்வியை மேற்கொண்டு, திருவிதாங்கூர் மகாராணியின் நிதியுதவியுடன் டவுன் பிளானிங் படித்தார். கோஷியின் அர்ப்பணிப்பு அவருக்கு மிகப்பெரிய சாதனையைப் படைக்க வழி வகுத்தது.
பிகே த்ரேசியா: லலிதாவைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்களில் பிகே த்ரேசியாவும் ஒருவர். லலிதா மற்றும் லீலாம்மாவுடன் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்களை உள்ளடக்கிய மூவரில் ஒருவர்.
1944-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார், திரேசியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் இதோடு நிற்கவில்லை. ஆசியாவிலேயே பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் பதவியை வகித்த முதல் மற்றும் ஒரே பெண்மணி என்ற பெருமையை த்ரேசியா பெற்றுள்ளார்.
COE கிண்டியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த முதல் பெண் லலிதா என்றாலும், 1944-ஆம் ஆண்டு தனது ஜூனியர்களான லீலாம்மா ஜார்ஜ் கோஷி மற்றும் பிகே த்ரேசியாவுடன் சேர்ந்து பட்டம் பெற்றார். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அதையும் தாண்டி இந்த மூவரும் முதல் பெண் பொறியாளர்கள் என்ற சாதனையைப் படைத்தனர்.
சகுந்தலா பகத்: இந்தியாவின் மிக முக்கியமான பெண் சிவில் இன்ஜினியர்களில் ஒருவரான சகுந்தலா பகத்தின் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வையால், உலகளவில் 200 பாலங்களை நிறுவிய புகழ்பெற்ற குவாட்ரிகான் நிறுவனத்தை உருவாக்கினார். குவாட்ரிகான் மாடுலர் பிரிட்ஜ் சிஸ்டம் மற்றும் பகத் யூனிஷியர் கனெக்டர்களை கண்டுபிடித்தவர் இவர்.
மேலும், ஐஐடி பாம்பேயில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பகத்தின் சிறப்பான சாதனைகள் 1993-ஆம் ஆண்டுக்கான பெண் பொறியியாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று தந்தது.
இலா கோஷ்: இலா கோஷின் பொறியியல் மீதான ஆர்வம், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முதல் இந்திய பெண் பொறியியலாளராக அவரை மாற்றியது. பெங்கால் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக ஆனார்.
1985 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ, பங்களாதேஷின் டாக்காவில் மகிளா பாலிடெக்னிக் நிறுவ கோஸை அணுகியது. அதன் பின் பெண்கள் பலரும் அவரைத் தொடர்ந்து இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தனர்.
அனுராதா டிகே: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) முதல் பெண் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராக அனுராதா டிகே சாதனைப் படைத்தார்.
GSAT-12 மற்றும் GSAT-10 போன்ற செயற்கைக்கோள் ஏவுதலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன், இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு அனுராதா முக்கிய பங்கு வகித்தார். அவரது குறிப்பிடத்தக்க பயணம் 1982-ஆம் ஆண்டில் தொடங்கியது. மேலும் அவர் தனது வாழ்க்கையில் 34 ஆண்டுகளை இஸ்ரோவுக்கு அர்ப்பணித்தார்.


Click it and Unblock the Notifications