முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்க்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக இரண்டு நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பத்தினர் நடத்தி முடித்துள்ளனர். பிரம்மாண்டமான முறையில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இந்த இரண்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
முதல் நிகழ்வு குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டமாக மே 31ஆம் தேதி ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் இதே போல மூன்று நாட்களுக்கு திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக அம்பானி குடும்பத்தினர் தேர்வு செய்த புகைப்பட நிபுணர் ஜோசப் பிரத்திக். இவர் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் கேட்பாராம். அதுமட்டுமின்றி இவரது பயணச் செலவு மற்றும் தங்குமிட செலவுகளை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜோசப் பிரத்திக் தனக்கென ஒரு குழுவினரை கொண்டு செயல்படுகிறார். இவர் விதிக்கும் கட்டணத்திற்கு ஏற்பவே இவரது படங்கள் புகைப்படங்கள் அனைத்தும் மிகச்சிறந்தவையாக இருக்கின்றன என சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகின்றனர்.
குறிப்பாக அம்பானி குடும்பத்தினரின் பிரம்மாண்டத்தையும் இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் அழகியலையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஜோசப் பிரதிக்கின் புகைப்படங்கள் இருப்பதாக பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஜோசப் பிரத்திக் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட் பிரிவில் கல்லூரி படிப்பை முடித்தவர். ஆனால் இதன் பிறகு தனக்கு புகைப்பட கலைஞராக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு இந்த துறையில் நுழைந்தார். முதலில் வேலைக்கும் சென்று கொண்டு புகைபடம் எடுப்பதையும் பணியாக கொண்டிருந்தார். 2010 ஆம் ஆண்டு தனக்கு மிகப்பெரிய அளவில் ஊதியம் தந்த வேலையை விட்டுவிட்டு முழு நேர புகைப்பட கலைஞராகவே மாறினார்.
ஜோசப் இந்தியாவில் பல்வேறு பிரபலங்களின் திருமண நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து தந்திருக்கிறார். குறிப்பாக கத்ரீனா கைஃப் - விக்கி கௌசல், விராட் கோலி - அனுஷ்கா சர்மா, சித்தார்த் மல்கோத்ரா - கைரா அத்வானி, கே எல் ராகுல் - அதியா ஷெட்டி மற்றும் பலர். இப்படி பல பிரபலங்களின் வாழ்வின் முக்கிய தருணங்களை என்றென்றைக்கும் திரும்பிப் பார்த்து மகிழக்கூடிய வகையில் அழகிய நினைவுகளாக புகைப்படம் எடுத்து தந்தவர்தான் ஜோசப்.
அண்மையில் கூட இவர் பிரான்சின் கேன்ஸ் நகரில் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிக்காக கேட்டி பெர்ரி கலந்து கொள்ள இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த ஒரு புகைப்படமே அவரது திறமைக்கு சான்றாக இருக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications