சர்வதேச அளவில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. முதலில் பொழுதுபோக்காக இதை பயன்படுத்திய மக்கள் தற்போது இதன் மூலம் தொழில்களை விரிவாக்கம் செய்வது, விளம்பரம் செய்வது என பல நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். புகழ்பெற்ற சமூக வலைதளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , டிக்டாக், எக்ஸ் உள்ளிட்டவற்றை கூறலாம்.
இதற்கு முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட எக்ஸ் தளம் பல லட்சம் பயனாளர்களை கொண்டுள்ளது. எலன் மஸ்க் இதனை கைப்பற்றி எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்தார். அப்போது எக்ஸ் தளம் மீது பயனாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், எக்ஸுக்கு போட்டியாக திரெட்ஸ்(Threads) என்ற செயலியை அறிமுகம் செய்தார்.

2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி திரெட்ஸ் செயலி முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போதைய சூழலில் திரெட்ஸ் செயலியில் 175 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாக அதன் தலைமை செயல் நிர்வாகியான மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்த ஒரு வார காலத்திலேயே சுமார் 100 மில்லியன் பயனாளர்களை பெற்றது. ஏனெனில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு திரெட்ஸ் செயலியை அணுகுவது எளிதாக்கப்பட்டிருந்தது. எனவே பலரும் திரெட்ஸை பயன்படுத்த தொடங்கினர். இதனால் முதல் ஒரு வார காலத்திலேயே திரெட்ஸ் ஃபேமஸானது. ஆனால் பின்னர் பயனாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது.
இதனிடையே தன்னுடைய திரெட்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க், ஓராண்டு முடிந்து விட்டது, திரெட்ஸ் தற்போது 175 மில்லியன் பயனாளர்களுடன் செயல்படுகிறது என கூறியுள்ளார். மற்ற சமூக வலைதளங்களுடன் ஒப்பிடும்போது திரெட்ஸ் செயலியை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக அன்றாடம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைவு தான் என சந்தை ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவித்துள்ளது.
சென்சார் டவர் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கடந்த மாதம் திரெட்ஸ் செயலியை பொறுத்தவரை பயனாளர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7 நிமிடங்களை செலவு செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது. இது ஜூலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 79 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 65 சதவீதமாக குறைந்து விட்டது என தெரிவித்துள்ளது.
திரெட்ஸ் செயலியில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல விளம்பரங்கள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. எனவே மெடா குழுமத்தில் தனிப்பட்ட ரீதியில் திரெட்ஸின் லாபம் என்பது குறைவு தான். கூடிய விரைவில் இதில் விளம்பரங்கள் செய்யும் வசதியும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications