சென்னை: அண்மையில் சிஏ முடித்த 26 வயது இளம்பெண் ஒருவர் பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் உயிரிழந்தார். இதனை அடுத்து கார்ப்பரேட் நிறுவன பணி கலாச்சாரம் குறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பளத்திற்காக பணிபுரியும் ஊழியர்கள் அவர்களின் சாதாரண மற்றும் சுயதொழில் சகாக்களுடன் ஒப்பிடும்போது அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே (The Periodic Labour Force Survey (PLFS)) என்ற தலைப்பில் ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலகட்டத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வில்,கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊதியத்திற்காக பணிபுரியும் ஊழியர்கள் சராசரியாக ஒருவாரத்திற்கு 48.2 மணி நேரங்கள் வேலை செய்கின்றனர் என தெரிவிக்கிறது. அதுவே சாதாரண பணிகளில் இருப்பவர்கள் மற்றும் சுயதொழில் புரிவோர்கள் வாரத்திற்கு சராசரியாக 40 மணி நேரத்தை வேலைக்காக செலவிடுகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவன பணி கலாச்சாரம் குறித்து இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது வெறும் புள்ளி விவரம் மட்டுமல்ல, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், உயர் செயல் திறன் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் சம்பளதாரர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான பெரு நிறுவன கலாச்சாரத்தை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சம்பளத்திற்காக வேலை செய்யும் நபர், வாரத்திற்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் பணி என வைத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வரை பணிபுரிகிறார்களாம், ஆறு நாட்கள் என்றால் 8 மணி நேரம் வரை பணிபுரிகிறார்களாம்.
சில மனிதவள நிபுணர்கள் 8 மணி நேர வேலை என்பது இயல்பானது தான் , அதிகமானது இல்லை என வாதிடுகின்றனர். இருந்தாலும், இத்தகைய பணிச்சூழல் என்பது ஒட்டுமொத்தமாக ஊழியர்களின் மன அழுத்த நிலையை அதிகரிக்க செய்கிறது என சிலர் கூறுகின்றனர் .
இதற்கிடையே சாதாரண தொழிலாளர் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் குறைந்த மணி நேரம் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான பணி நேரங்களை அவர்களே முடிவு செய்கிறார்கள், இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நிலையான வருமானம் என்பது இல்லாதது ஒரு பெரிய அழுத்தத்தை தருகிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
அண்மையில் பணிச்சுமை காரணமாக கேரளாவை சேர்ந்த ஒரு இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. எதிர்க்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், தொழில்துறையினரும் இளம் தொழிலாளர்கள் வேலை என்ற பெயரில் சுரண்டப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்மீகமும் ஒருவருக்கு இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளும் மன வலிமையை வழங்கும் என கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications