தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம். குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் தான் மகளிர் உரிமைத் தொகை என கூறி இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மகளிர் உரிமைத் தொகை: கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் திட்டமாகவும் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகவும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைந்திருக்கிறது.

எவ்வளவு தொகை: கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகள் மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக இந்த திட்டத்தின் மூலம் பெற்று வருகின்றனர். நேரடியாக பெண்களின் வங்கி கணக்கிலேயே இந்த பணம் வரவு வைக்கப்பட்டு விடுகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
குழந்தைகள் படிப்பு: பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் குடும்பங்களில் இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை பெரிய உதவியாக இருக்கிறது. வீட்டு வேலைக்கு செல்லக்கூடிய ராஜியை பொறுத்தவரை இந்த 1000 ரூபாய் பணம் தன்னுடைய பெண் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாக கூறுகிறார் . தன்னுடைய சம்பளம் வீட்டு செலவிற்கே சென்று விடுவதாகவும் இந்த 1000 ரூபாய் உரிமைத் தொகை கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் தன் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவுவதாகவும் கூறுகிறார்.
மருந்து செலவு: வீடுகளில் வயதானவர்களுக்கு உதவியாளராக வேலை பார்த்து வரும் பழனி கூறுகையில் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்னுடைய வருமானம் தான் வீட்டின் ஆதாரம், இந்த 1000 ரூபாய் எங்கள் இருவரின் மருந்து செலவுக்கு உதவியாக இருக்கிறது நான் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை என்கிறார்.
முதலீடு: கார்மெண்டில் வேலை செய்து வரும் ராதாவை பொறுத்தவரை மாதம் தோறும் வரக்கூடிய இந்த 1000 ரூபாய் என்பது பெரிய நம்பிக்கை தருவதாக கூறுகிறார். தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி அந்த பணத்தை வங்கியிலேயே ஆர்டி முறையில் முதலீடு செய்வதாக கூறுகிறார். சிறுக சிறுக சேமிக்கப்படும் இந்த பணம் எதிர்காலத்தில் பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் என அவர் நம்புகிறார்.
வீட்டு செலவு: வீட்டில் இருந்த படியே துணி தைத்து கொடுக்கும் பரிமளாவை பொறுத்தவரை இந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை மாதாந்திர வீட்டு செலவுக்கு உதவுவதாக தெரிவிக்கிறார். சிலிண்டர் வாங்குவதற்கும், பண்டிகை காலங்களில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அல்லது துணிமணிகள் வாங்க தான் பயன்படுத்துவதாக கூறுகிறார்.

1000 ரூபாய் உதவித் தொகையை பெண்கள் வீட்டு செலவு, மருத்துவ செலவு, முதலீடு என பல விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த பணம் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை தந்திருக்கிறது. குறிப்பாக பெண்களின் வங்கி கணக்கிலேயே பணம் வருவது அவர்களின் கைகளை ஓங்க செய்திருக்கிறது என்பதையே காண முடிகிறது.
49% பயனாளிகள் : அண்மையில் லண்டன் கிங்ஸ் கல்லூரி அண்மையில் தமிழ்நாட்டில் தர்மபுரி ,விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளிடம் ஒரு ஆய்வினை நடத்தி அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது . அதில் 49 சதவீத பயனாளிகள் அந்த பணத்தை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்துகிறார்கள் என கூறுகிறது. மருந்து, உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இதை பயன்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
முன்னோடி திட்டம்: ஒட்டுமொத்தமாக பொருளாதார ரீதியாக பின்னடைந்திருக்கும் குடும்பங்களின் பட்ஜெட்டில் இந்த ஆயிரம் ரூபாய் என்பது வலு சேர்ப்பதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பது தமிழ்நாடு கடந்து பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய ஒரு சிறப்பான திட்டமாக மாற்றமடைந்து இருக்கிறது.

பின்பற்றும் மாநிலங்கள்: தமிழ்நாட்டின் இந்த திட்டத்தை அடுத்து மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் குடும்ப வருமானம் கொண்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1250 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஜனவரி 2023 முதல் இது அமலுக்கு வந்தது.
மகாராஷ்ட்ரா மாநில அரசு மஜி லட்கி பகின் யோஜனா என்ற திட்டத்தை 2024 ஜூன் முதல் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1500 ரூபாய் மாதம் தகுதிவாய்ந்த பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.சட்டீஸ்கர் அரசு மகிளா வந்தன் யோஜனா திட்டத்தை 2024 மார்ச் மாதம் முதல் செயல்படுத்துகிறது. இதன் மூலம் 1000 ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஒடிசா அரசு சுபத்ரா யோஜனா திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 10000 ரூபாயை இரண்டு தவணையாக 5000 ரூபாய் என வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு அரசு வழங்க உள்ளது. இந்த மாதம் தான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதே போல டெல்லியில் மாதம் 2500 பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டமும் ஹரியானாவில் 2100 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications