பொதுவாக ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து விட்டால் அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது மந்தமடைய துவங்கும், இது உலகில் அனைத்து நாடுகளிலும், அனைத்து துறைகளிலும் இருக்கும் இயல்பான விஷயம். ஆனால் ஒரு துறையை தவிர, டெக்னாலஜி துறையில் இருக்கும் நிறுவனங்கள் மிகப்பெரியதாக வளர்ந்த பின்னரும் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை கடந்த 30- 35 வருடங்களாக பார்த்து வருகிறோம்.
அதுவும் இந்த ஏஐ காலத்தில் டெக் நிறுவனங்கள் தான் முதலீட்டாளர்களின் முக்கிய வேட்டையாக உள்ளது. இதற்கு சரியான உதாரணம் என்றால் கூகுள் தான், உலகிலேயே மிகப்பெரிய டெக் நிறுவனமாக இருக்கும் அதேவேளையில், இந்த நவீன ஏஐ காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளையும், அதன் எதிர்காலம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது என்றால் மிகையில்லை.

இதன் மூலம் டெக் உலகில் இருக்கும் மோனோபோலிகள் தான் இனி உலக வர்த்தக சந்தையை ஆளும் பவரை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பம், சேவை போன்றவற்றை தாண்டி முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவது ஒரு நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகள் தான்.
அப்படி கூகுள் ஒரு நாளுக்கு 1.2 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டி வருகிறது. இது எவ்வளவு பெரிய தொகை என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள ஒரு சிறிய உதாரணம், இந்தியாவின் மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்ட டாப் 6 நிறுவனங்களான ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், ஓஎன்ஜிசி, பிபிசிஎல், எஸ்பிஐ, ஹெச்பிசிஎல் ஆகியவற்றின் மொத்த ஒரு நாள் வருமானத்திற்கு இணையானது தான் இந்த 1.2 பில்லியன் டாலர்.
இதைவிட இன்னொரு விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துவது லாப அளவுகள் தான், கூகுள் நிறுவனத்தின் லாப விளிம்பு 31.6 சதவீதம், இதேபோல் இந்திய நிறுவனங்களின் லாப விளிம்பு (Profit Margin) வெறும் 6-9 சதவீதம் மட்டுமே.
கூகுள் ஏற்கனவே Search, YouTube, Gmail, Android, Google Maps என பல சேவைகளை கொண்டு இயங்கி வந்தாலும்.. கூகுள் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பலமாக இருப்பது அதன் ஏஐ மாடல்களும், உலகம் முழுவதும் இருக்கும் கோடி கணக்கான வாடிக்கையாளர்களும் தான்.
ஏஐ, தொழில்நுட்ப மாற்றம் காரணமாக கடந்த சில வருடங்களாக அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனங்கள், அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்ட நிறுவனங்கள், பெரும் செலவு செய்து தன்னை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களின் முக்கிய டார்கெட் ஆக மாறி வருகிறது.
இது அமெரிக்காவின் கூகுள் ஆக இருந்தாலும் சரி, இந்தியாவில் ரிலையன்ஸ், அதானி குழுமம் ஆக இருந்தாலும் சரி. இதேபோல் தொழில்நுட்ப மாற்றத்தாலும், மக்களின் விரும்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் வர்த்தக சந்தையில் பெரும் தடுமாற்றம் உருவாகி வருகிறது.
இதனால் மிகப்பெரிய கான்சாலிடேஷன் சீசன் வரலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதாவது ஒரே துறையில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை வாங்குவது அல்லது இரண்டு - மூன்று சிறிய நிறுவனங்கள் இணைந்து பெரிய நிறுவனங்களுடன் போட்டிப்போவது என நடக்கும் காலமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் ஜியோ அறிமுகமான பிறகு இந்தியாவில் 10க்கும் அதிகமாக இருந்த டெலிகாம் நிறுவனங்கள் வெறும் 4 நிறுவனங்களாக குறைந்தது போல்..

இதனால் இனி வரும் காலக்கட்டத்தில் மோனோபோலிகளின் ஆதிக்கம் அதிகமாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்தாலும் சரி, உலகில் பிற நாட்டில் முதலீடு செய்தாலும் சரி, மோனோபோலி நிறுவனங்களை டார்கெட் செய்து முதலீடு செய்தால் உங்களுடைய முதலீடு பெரிய அளவில் வளரும் வாய்ப்பை பெறும்.
மோனோபோலி நிறுவனங்கள் அடுத்தக்கட்ட ஆதிக்க நிலையை துவங்க உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யும் போது அந்நிறுவனத்தின் பண புழக்கம், நிதி ஆதாரம், லாப விளிம்புகள், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள், போட்டி நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவற்றை கணக்கில் கொண்டு முதலீடு செய்தால் பெரும் லாபத்தை பெறலாம். இதேபோல் இந்த மோனோபோலி நிறுவனங்களின் கேம் அடுத்த 10-15 வருடங்களுக்கானது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications

