மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நினைவலைகளை தான் நாடே தற்போது அசைபோட்டு வருகிறது. ஒரு தொழிலதிபராக தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மட்டும் இல்லாமல் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் யோசித்தவர் தான் ரத்தன் டாடா. சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் இந்த குணம், அவரது மகாகுருவாக கருதப்படும் சர் தோராப்ஜி டாடாவிடம் இருந்து தான் இவருக்கு வந்துள்ளது.
சர் தோராப்ஜி டாடா இந்தியாவின் ஸ்டீல் மேன் என அறியப்படுகிறார். இந்தியாவின் நவீன தொழில்துறையை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. 1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பிறந்தவர்தான் சர் தோராப்ஜி டாடா. இவர் ஜாம்செட்ஜி டாடாவின் மூத்த மகன்.

ஜாம்செட்ஜி டாடா 1904 ஆம் ஆண்டு உயிரிழந்ததை அடுத்து தோராப்ஜி டாடா நிறுவன பொறுப்புகளை எடுத்துக் கொண்டார். அந்த சமயத்தில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தது. அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சேரும் .
1907-ம் ஆண்டு தோராப்ஜி, டாடா ஸ்டீல் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவின் முதல் ஸ்டீல் நிறுவனமாக அப்போது இது உருவானது. இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தது இந்த நிறுவனம் தான். இதனை அடுத்து பல்வேறு தொழில் துறைகளுக்கும் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் நிறுவனமாக இது மாறியது.
இவரது தலைமையின் கீழ் டாடா குழுமம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இரும்பு ,மாங்கனீஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கண்டறிந்து அது சார்ந்த தொழில்களை விரிவு படுத்தியது.
1910 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தோராப்ஜி டாடாவுக்கு சர் பட்டத்தை வழங்கியது. தொழில்கள் மட்டுமில்லாமல் விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டவர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இந்தியாவை சேர்ந்த வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தன்னுடைய சொந்த காசில் அழைத்துச் சென்றவர் இவர்.
கேம்பிரிட்ஜில் கல்வி பயின்று வந்தபோது இவருக்கு கிரிக்கெட், கால் பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் மீது ஆர்வம் பிறந்தது. இதனை அடுத்து இந்தியாவில் ஒலிம்பிக் கவுன்சிலை நிறுவினார் இவர்.
இந்திய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார் . 1924 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியை தனது சொந்த காசில் அழைத்து சென்ற பெருமை இவரையே சாரும். இந்தியாவின் முன்னணி தொழில்நகரமாக ஜாம்ஷெட்பூர் வளர்வதற்கு முக்கிய காரணமே சர் தோராப்ஜி டாடா தான்.
தன் வாழ்நாளின் இறுதிக்கட்டங்களில் சர் தோராப்ஜி டாடா பல்வேறு சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் அறக்கட்டளை செயல்களிலும் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டு அவர் இறப்பதற்கு முன்பாக சர் தோராப்ஜி டாடா என்று அறக்கட்டளையை தொடங்கி தன்னுடைய சொத்தின் பெரும்பாலான பகுதிகளை மக்கள் நல பணிகளுக்காக வழங்கினார்.


Click it and Unblock the Notifications