மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், உலகின் 11ஆவது பணக்காரர், ரிலையன்ஸ் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசர் என பல புகழுக்கு சொந்தக்காரர் முகேஷ் அம்பானி. கடந்த 10 ஆண்டுகளில் தான் இவரது சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது இதன் மதிப்பு 1.75 லட்சம் கோடி ரூபாய். இதுவே 2016 ஆம் ஆண்டில் சொத்து மதிப்பு சற்றே சரிவடைந்து 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் ,இந்திய ரூபாய் மதிப்பில் 1.61 லட்சம் கோடி என சரிவடைந்தது.

2017 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 23.2 பில்லியன் டாலர்கள் (1.94 லட்சம் கோடி ரூபாயாக ) அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர் (3.35 லட்சம் கோடி ரூபாய்) என அதிகரித்தது. இதன் பிறகு 2019இல் 50பில்லியன் டாலர் என அதிகரித்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இவரது தொழில்கள் ஸ்தம்பித்து 2020 ஆம் ஆண்டில் 36.8 பில்லியன் டாலர் என சரிவை கண்டது. இந்திய ரூபாயில் 3.7 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.
2021ஆம் ஆண்டிலிருந்து தான் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயரத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலர்கள் அதாவது 7.6 லட்சம் கோடி ரூபாய் என உயர்வு கண்டது. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது. 2021 முதல் 2024 வரை முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. தற்போதைய சூழலில் அவருடைய சொத்து மதிப்பு 116.7 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் 9.7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இதற்கு முக்கிய காரணம் மிக ஸ்மார்ட்டான முறையில் முகேஷ் அம்பானி மேற்கொண்டு இருக்கக்கூடிய முதலீடுகள் மற்றும் தொழில்கள் ஆகும். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கக்கூடிய முகேஷ் அம்பானியின் டிஜிட்டல் சார்ந்த தொழில்கள் தான் பெரிய அளவில் அவரது சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக ஜியோ நிறுவனம் வந்த பிறகு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வரும் நாட்களிலும் அவரது சொத்து மதிப்பு வளர்ச்சி பாதையிலேயே இருக்கும் என சொல்லப்படுகிறது.
தற்போது 67 வயதாக கூடிய முகேஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமத்தின் மேலாண் இயக்குனராகவும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நிறுவன பங்குகள் மூலம் இவருக்கு கணிசமான வருமானம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications