டெல்லி: ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வாரம் ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்து ரயில்வே துறை சார்ந்து தகவல்களை வெளியிடுகிறார்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ரயில்வே நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது என சுட்டிக்காட்டினார். இதற்கு முக்கிய காரணம் டிக்கெட்டுகளுக்கு அரசு வழங்கக்கூடிய மானியம் தான் என தெரிவித்தார்.

பொதுவாக ஒரு பொருளின் விலை 100 ரூபாயாக இருக்கிறது என்றால் அதை 105 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்தால் தான் லாபம் வரும். ஆனால் ரயில் டிக்கெட் பொருத்தவரை இந்த 100 ரூபாயில் 55 ரூபாயை அரசு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து செலுத்துகிறது. எனவே ரயில்வேக்கு இது பெரிய நிதிச்சுமையாக இருக்கிறது என்றார்.
இவ்வாறு வழங்கப்படும் மானியங்களால் மட்டும் ஆண்டுக்கு 59,000 கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படுகிறது என சுட்டிக்காட்டினார். மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது ரயில்வே துறையானது மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை திரும்ப பெற்றது. ரயில்வேயில் நிதி நிலைமையை மேம்படுத்து பொருட்டு இந்த அறிவிப்பு அப்போது வெளியானது. இந்த கோடை விடுமுறை காலத்தில் மட்டும் 19,837 ரயில்களை இயக்கியதாகவும் சுமார் 40 மில்லியன் பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 6000 கிலோமீட்டர் வழித்தடங்களில் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு காரணமாகவே ஏற்கனவே உள்ள ரயில் தடங்களில் கூடுதலான ரயில்களை நம்மால் இயக்க முடிந்தது என்றார்.
2024 ஆம் நிதி ஆண்டில் புதிதாக 5,300 கிலோமீட்டர் ரயில் வழித்தடங்கள் பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளன என தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சற்றே அதிகம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.
புதிய வழித்தடங்களை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும், இரண்டு மாதங்களில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவித்த அவர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் செயல்படும் என்றார். 2029 ஆம் நிதியாண்டுக்குள் 250 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications