மத்தியபிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்க கூடிய உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திடீரென வீசிய புயல் காற்றில் சேதமடைந்திருக்கிறது. கந்துவா மாவட்டத்தில் நர்மதை நதியின் மீது ஓம்கரேஸ்வர் அணை பகுதியில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் இந்தியாவில் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழலை மாசு படுத்தாத சூரிய ஒளி மின்னாற்றல் உள்ளிட்ட மாற்று மின் உற்பத்தி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முதன்மைப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை நதியின் மீது ஓம்கரேஸ்வர் அணையில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மற்றும் மத்திய பிரதேச அரசு இணைந்து இந்த பணிகளை முன்னெடுத்துள்ளன.

சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் விரைவில் முழுமையான செயல்பாட்டுக்கு வர இருக்கும் நிலையில், இப்பகுதியில் திடீரென மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காற்றின் காரணமாக இங்கிருந்த சூரிய மின் உற்பத்தி தகடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இதில் ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஓம்கரேஸ்வர் கேல்வாக்குர் பகுதியில் 100 மெகாவாட் திறன் கொண்ட தகடுகளும், இந்தாவாடி பகுதியில் 88 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட தகடுகளும், ஏகாந்த் கிராமத்தில் 90 மெகாவாட் திறன் கொண்ட தகடுகளும் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தாவாடி பகுதியில் தான் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சூரிய சக்தி மின் உற்பத்தி தகடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து வருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த மாத இறுதியில் மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் அதிகாரியான சுரேஷ் திவேதி இது மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார். சோலார் தகடுகள் பெரிய அளவில் சேதமடைந்திருப்பதாக கூறியுள்ளார். சேதங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரண்டு நாட்களில் அதன் மதிப்பு என்ன என்பது குறித்து தெரிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.
சுமார் 4.50 லட்சம் வீடுகளுக்கு மின்விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மிதக்கும் சூரிய ஒளி மின் ஆற்றல் திட்டத்தை மத்திய பிரதேச அரசு கொண்டு வந்தது. தரைப்பரப்பில் சூரிய ஒளி மின் ஆற்றல் நிலையத்தை அமைத்தால் பெரிய அளவு நிலம் தேவைப்படும் என்றும் நீரில் மிதப்பதால் நிலப்பரப்புக்கு அவசியமில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். அதே வேளையில் நீரின் மீது தகடுகள் மிதப்பதால் நீர் ஆவியாவது தடுக்கப்படும் என்றும் மத்திய பிரதேச அரசின் துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை தொடங்கிய போது தெரிவித்திருந்தனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications