ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது வாடிக்கையாகி வருகிறது. திடீரென ஒரு மெயில் அனுப்பி இனி நீங்கள் இங்கே ஊழியர் இல்லை என கூறி விடுகின்றனர். இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு ஐடி நிறுவன மேலாளர் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
சென்னையில் ஐடி துறையில் மேலாளராக பணிபுரியும் நபர் ஒருவர் ரெடிட் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் வழக்கம்போல தான் வேலைக்கு சென்றபோது உயர் அதிகாரிகள் ஒரு தனி அறைக்கு அழைத்து ஒரு எக்செல் ஷீட்டை கொடுத்ததாக கூறியுள்ளார். அதில் மொத்தம் 12 ஊழியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் அனைவரையும் வெள்ளிக்கிழமைக்குள் வேலையை விட்டு நீக்கிவிட வேண்டும் என அவரிடம் கூறினார்களாம். ஒவ்வொரு ஊழியரிடமும் பேசி அவர்களின் பணிநீக்கம் குறித்து விளக்க வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டதாம்.

இந்த பட்டியலில் பட்டியலில் இருந்தவர்கள் யாருமே புதியவர்கள் அல்ல, என்னுடன் 2016ஆம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றியவர்கள். இரவில் விழித்திருந்து ஒன்றாக செய்தவர்கள், அதிகாலை 3 மணி வரை நிறுவனத்திற்காக உழைத்தவர்கள், நண்பர்கள், ஒருவருக்கொருவர் குடும்பமாக பழகி கொண்டவர்கள் என கூறியுள்ளார்.
இவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் அன்போடு அண்ணா என்றுதான் அழைப்பார்கள். அவர்களின் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரையும் எனக்கு அவர்களின் குடும்ப சூழல்கள் எனக்கு தெரியும். இப்படி இருக்க அவர்களை அழைத்து இனி உங்களுக்கு வேலையில்லை என எப்படி நான் கூறுவேன் என பதிவு செய்துள்ளார்.
பணிநீக்கம் செய்ய வழங்கப்பட்ட பட்டியலில் ஒரு மூத்த டெவலப்பர் இருக்கிறார், சில மாதங்களுக்கு முன்புதான் தனது சொந்த வீட்டிற்காக பெரிய அளவில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார், மற்றொரு ஊழியரின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்; அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தும் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டை நம்பிதான் நடக்கிறது. இன்னொரு ஊழியரின் மனைவிக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கவிருக்கிறது என கூறியுள்ளார்.
இத்தகைய கடினமான சூழ்நிலையில் இருக்கும் ஊழியர்களிடம் சென்று, உங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள் என எப்படி சொல்வது என அந்த மேலாளர் வினவியுள்ளார். நிறுவனங்கள் எடுக்கும் இத்தகைய கடினமான முடிவுகளுக்கு பலிகடாவாக்கப்படுவது நடுநிலை மேலாளர்கள்தான். உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்களின் கண்ணீரோ, அவர்களின் குடும்ப சூழலோ தெரிவதில்லை; அவர்களுக்கு வேலை சரியாக முடிய வேண்டும் அவ்வளவுதான் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலையை செய்வதை விட, நாமே ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாமா என தனக்கு தோன்றியதாகவும் , ஆனால் தான் வேலைவிட்டு நின்றாலும் நிலைமை மாற போவதில்லை, மற்றொரு மேலாளர் வந்து இவர்களை பணிநீக்கம் செய்யத்தான் போகிறார் என்பனை உணர்ந்து மிகப்பெரிய மனச்சிக்கலில் இருந்ததாக கூறியுள்ளார். பணிநீக்க பட்டியலில் இருக்கும் ஊழியர்களை நான் எப்படி எதிர்கொள்ள போகிறேனோ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications

