ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்து வந்த வைர கற்கள் மீதான முதலீடு தற்போது அடித்து உடைக்கப்பட்டு தரைதட்டியுள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரம் அதிகளவில் பயன்படுத்தப்படுவது மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனால் செயற்கை வைரம் மட்டும் அல்லாமல் உண்மையான வைரத்தின் மதிப்பும் தரை தட்டியுள்ளது. உதாரணமாக 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரத்தின் விலை ஒரு கேரட்டுக்கு சுமார் 389 டாலராக இருந்தது.

ஆனால் தற்போது இதன் விலை சுமார் 71 டாலராகக் குறைந்துள்ளது. வெறும் 4 ஆண்டுகளில் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களின் விலை 82 சதவீதம் சரிந்துள்ளது. இந்த மோசமான சரிவுக்கு முக்கியக் காரணம், முதலும் முக்கியமான விஷயம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரமும், நிஜ வைரத்தின் தன்மையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது தான்.
இதை தாண்டி இந்த செயற்கை வைரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெரியளவில் அதிகரித்துள்ளது மூலம் சந்தையில் சப்ளை அதிகமாகி விலை குறைய வழிவகுத்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவின் மொத்த வைர ஏற்றுமதியை பார்க்கும் போது கேரட் அடிப்படையில் பார்க்கும் போது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களின் பங்கு சுமார் 51 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் நிஜ வைரம் அதாவது பாலிஷ் செய்யப்பட்ட வைரத்தின் ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி விதிக்கப்படும் காரணத்தால் நிஜ வைரத்தின் வர்த்தகம் மோசமான நிலைக்கு இழத்து செல்லப்பட்டு உள்ளது. சரி இப்போது சாமானிய மக்களின் அடிப்படை கேள்வி என்னவென்றால் வைரத்தை வாங்கலாமா..? வேண்டாமா..? என்பது தான்.
அதாவது நீங்கள் தினசரி பயன்பாட்டுக்கோ, அல்லது யாருக்கேனும் பரிசு தர வேண்டுமாயின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரத்தை வாங்கலாம். ஆனால் முதலீடாகக் கருதி வாங்குவது என்றால் தவிர்க்க வேண்டும்.
இதேபோல் நிஜ வைரத்தின் மதிப்பும் வேகமாக குறைந்து வருவது மூலம் இதை வாங்குவதும் தவறான முடிவாக இருக்கும். காரணம் இன்று வாங்கிய நிஜ வைரத்தின் மதிப்பு அடுத்த 5 வருடத்தில் குறையவும் வாய்ப்பு உள்ளதால் சமானிய மக்கள் வைரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.
இந்த தீபாவளிக்கு நீங்கள் வைரம் நகை வாங்கத் திட்டமிட்டால், 3 விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
1. வைரத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் கிரேடிங் சான்றிதழை நகை கடையில் கேட்டு வாங்குங்கள்.
2. சந்தையில் வைரத்தின் விலையை தெரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் 3 நகைக்கடைகளில் ஒரு காரட் வைரத்தின் விலையை செக் செய்துக்கொள்ளுங்கள்.
3. இறுதியாக பழைய வைரத்தைத் விற்பனை செய்வதற்கு என்ன விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளது என்பதை தெளிவுப்படுத்திக்கொண்டு வாங்குகள்.


Click it and Unblock the Notifications