இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டன. இன்னும் எளிமையாக சொல்லப்போனால் கிரெடிட் கார்டுகள் நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். வட்டி இல்லா கடன், ரிவார்ட் பாயிண்ட்டுகள் போன்ற பல நன்மைகள் கிரெடிட் கார்டு மூலம் நமக்கு கிடைக்கின்றன. இருப்பினும் கிரெடிட் கார்டுகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுக்கும் வசதி வழங்கப்பட்டாலும் இது நிதி இழப்புக்கு வழிவகுக்கும். இந்தப் பதிவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் என்ன சிக்கல்கள் ஏற்படும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல்: ஒவ்வொரு கிரெடிட் கார்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புடன் வருகிறது. அதாவது உங்கள் ஒட்டுமொத்த கடன் வரம்பில் குறிப்பிட்ட சதவீதம் ரொக்கமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக கிரெடிட் கார்டு வழங்குநர்கள் உங்கள் கடன் வரம்பில் 20 சதவீத முதல் 40 சதவீதம் வரை மட்டுமே பணமாக எடுக்க அனுமதிக்கின்றன. அவசர காலங்களில் இந்த வசதியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டுகளில் இருந்து பணம் எடுப்பது எளிதான ஒன்றாக தோன்றினாலும்.. இதற்குப் பின்னால் இருக்கும் சிக்கல்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பணம் எடுப்பதற்கான செலவு: கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதால் உடனடி செலவுகள் ஏற்படும். நீங்கள் பணம் எடுத்தவுடன், பொதுவாக எடுக்கப்பட்ட தொகையில் 2% முதல் 4% வரையிலான கட்டணம் விதிக்கப்படும். வழக்கமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் நீங்கள் வட்டி இல்லாத காலத்தைப் பெற முடியும். ஆனால் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் முதல் நாளிலிருந்தே வட்டி விதிக்கப்படும்.
பொதுவாகவே கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி அதிகமாக இருக்கும். மேலும் முழுத் தொகையும் நீங்கள் முழுமையாகச் செலுத்தி முடிக்கும் வரை வட்டி தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும்.
மறைக்கப்பட்ட கட்டணங்கள்: அதிக வட்டி விகிதங்களைத் தவிர, வங்கிகள் பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணங்களையும் விதிக்கின்றன. இந்த கட்டணங்கள் பரிவர்த்தனையின் தேதியிலிருந்து உங்கள் பில் தொகையை செலுத்தும் நாள் வரை கணக்கிடப்படும். அதற்கு மேல், நீங்கள் முழுத் தொகையையும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறினால், நீங்கள் தாமதமாகப் பணம் செலுத்துவதற்கும் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்தக் கட்டணம் நிலுவையில் உள்ள தொகையில் 15% முதல் 30% வரை இருக்கலாம்.
கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பது அவசர காலங்களில் வசதியான விருப்பமாகத் தோன்றினாலும், அதனுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் கட்டணங்கள் நிதி சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக வட்டி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் ஆகியவை நிதி ரீதியாக ஆபத்தான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன. அவசர காலங்களுக்கு மட்டும் இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதும், முடிந்தவரை வேறு மாற்று வழிகளை ஆராய்வதும் சிறந்தது.


Click it and Unblock the Notifications