சென்னை: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சந்தை மாற்றங்களை கவனித்து என்னால் முதலீடு செய்ய முடியாது என எண்ணுபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்த வாய்ப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி காம்பவுண்டிங் முறையில் இவை சிறந்த லாபத்தையும் வழங்குகின்றன. அந்த வகையில் ஐசிஐசிஐ நிறுவனத்தின் இந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்தவர்கள் எல்லாம் தற்போது 1 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.
ஐசிஐசி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் அதாவது 16 ஆண்டுகளுக்கு முன்பு 'ICICI Prudential Bluechip fund' என்ற ஒரு மியூச்சுவல் ஃபண்டை அறிமுகம் செய்தது. லார்ஜ் கேப் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை இந்த மியூச்சுவல் ஃபண்டானது ஆண்டுக்கு 15.92 சதவீத லாபத்தை தந்துள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மாதந்தோறும் 12,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இதைதான் பவர் ஆஃப் காம்பவுண்டிங் என கூறுவார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஓராண்டு காலத்தில் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்தவர்கள் அந்த ஓராண்டு காலத்தில் மொத்தமாக செய்த முதலீடு 1, 44,000 ரூபாய் அவர்களுக்கு கிடைத்த தொகை 1,58,843 ரூபாய்.
அதுவே ஐந்தாண்டு காலத்தில் அவர்கள் செய்த முதலீட்டின் மதிப்பு 7,20,000, ஐந்து ஆண்டுகள் முடிவில் அவர்களுக்கு கிடைத்த தொகை 12,77,646 ரூபாய். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தொடர்ந்து பத்து ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் 12,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தவர்கள் மொத்தமாக முதலீடு செய்த தொகை 14,40,000 ரூபாய் அவர்களுக்கு திரும்ப கிடைத்தது 34,16 ,943 ரூபாய். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 16 ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் ஒருவர் செய்த முதலீட்டு தொகை 23,64,000 ரூபாய் அதன் தற்போதைய மதிப்பு 1,05,57,000 ரூபாய் ஆகும்.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தற்போது 66 ,026 கோடி ரூபாய் பணத்தை மேலாண்மை செய்கிறது. இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் ஐசிஐசிஐ வங்கி ,ஹெச்டிஎஃப்சி வங்கி ,எல்&டி, இன்போசிஸ், ரிலையன்ஸ், மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட் ,சன் பார்மா மற்றும் ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய ப்ளூ சிப் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications