சம்மர் சீசன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். நம்மூரில் ஏராளமான ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றின் விலையும் ரூ.60-இல் தொடங்கி ரூ.200 வரை இருக்கும். ஆனால் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை மாம்பழங்கள் ரூ.3 லட்சம் வரையில் விற்பனையாகிறது. உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான மாம்பழங்களில் இதுவும் ஒன்று. இந்த வகை மாம்பழங்களை இந்தியாவில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார்.
ஒடிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தேபா பதியாமி. இவர் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக கருதப்படும் மியாசாகி மாம்பழத்தை தனது சொந்த கிராமத்தில் வளர்த்துள்ளார். இந்த வகை மாம்பழங்கள் சர்வதேச சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வரை விலை போகிறது.
ஜப்பானின் மியாசாகி மாகாணத்தைப் பூர்விகமாகக் கொண்டதால் இந்த வகை மாம்பழங்கள் "மியாசாகி" என்ற பெயரை பெற்றது. ஜப்பானில் மியாசாகி மாம்பழங்களை "Taiyo no Tamago" என்று அழைக்கின்றனர். சூரியனின் முட்டை என்பது தான் இதன் தமிழ் அர்த்தம். பார்ப்பதற்கு ஊதா மற்றும் அடர் சிவப்பு நிறத்தில், நாவூரும் இனிப்புடன் இருப்பதால் இந்த பெயரை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் அதன் தரம் மற்றும் சுவைக்காகவே இவ்வளவு விலைக்கு விற்பனையாகி வருகிறது.

பிரீமியம் கிப்ட்களை பரிசளிப்பவர்களும், இந்த வகை மாம்பழங்களை பரிசாக வழங்கி வருகின்றனர், ஜப்பானில் இந்த ரக மாம்பழங்கள் எவ்வளவு ஸ்பெஷல் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்? தற்போது விவசாயி தேபாவும் இதே ரக மாம்பழங்களை தான் தனது தோட்டத்தில் வளர்த்துக் காட்டியுள்ளார். தேபா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமூக சேவையாளரிடமிருந்து மியாசாகி மரக்கன்றைப் பெற்றுள்ளார். ஒடிசாவின் கடுமையான கால நிலையிலும் பல ஆண்டுகளாக அந்தச் செடியை பொத்தி பொத்தி பராமரித்து வந்துள்ளார். அவருடைய கடின உழைப்பு வீண் போகவில்லை. தற்போது மியாசாகி மரக்கன்று மாம்பழங்களை தரத் தொடங்கியுள்ளது.
தேபா வைத்த மரத்தில் மாம்பழங்கள் காய்த்து குலுங்கத் தொடங்கியுள்ளன. இந்த விஷயம் காட்டு தீ போல பரவவே, பக்கத்து கிராம மக்களும் விசித்திரமான மியாசாகி மாம்பழங்களை பார்க்க தேபாவின் தோட்டத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கூட்டம் கூடுவது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், எங்கே பழங்கள் திருடு போய்விடுமோ என்ற கவலையும் தேபாவிற்கு வந்துவிட்டது. இதனால் வீட்டில் உறங்காமல் பாயை சுருட்டி கொண்டு வந்து மாமரத்தின் அடியிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்.
மரத்தில் நிறைய மாம்பழங்கள் காய்த்திருந்தாலும் அதை எப்படி பணமாக மாற்றுவது என்பதுதான் தேபாவிற்கு தற்போது இருக்கும் புதிய பிரச்சனை. உள்ளூர் சந்தைகளில் கண்டிப்பாக இந்த விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள். ஜப்பானில் ரூ .3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் இந்த வகை மாம்பழங்களுக்கு சரியான கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு முறையாக சான்றிதழ்கள் பெற வேண்டும்.
இத்தனை பிரச்சனை இருந்தாலும் மாம்பழங்களை எப்படியாவது பிறரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தேவாவின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. அதேபோல கர்நாடகா மாவட்டத்தின் கொப்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா என்ற விவசாயியும் தனது சொந்த நிலத்தில் 200 மியாசாகி கன்றுகளை பயிரிட்டு தற்போது வெற்றிகரமாக மாம்பழங்களை விளைவித்துள்ளார். இவரும் பெரிய சந்தை மதிப்பு இல்லாததால் எப்படி மாம்பழங்களை விற்பனை செய்வது என்ற கவலையில் உள்ளார். இது போன்ற விவசாயிகளுக்கு அரசு முன்வந்து உதவிகளை செய்தால், அரிய வகை கன்றுகள் இந்தியாவிலேயே பயிரிடப்படும். அதே சமயம் கடுமையாக உழைத்து அயல்நாட்டு ரகங்களை உள்ளூரில் விளைவிக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications