பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக இருக்கும் பெங்களூரில் ரியல் எஸ்டேட் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. பெங்களூருவில் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் வேகம் எடுத்து இருப்பதாக ப்ராப் ஈக்விட்டி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐடி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்தாலும் இங்கே ரியல் எஸ்டேட் சந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே தரவுகள் கூறுகின்றன. இதன்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் புதிதாக குடியிருப்புகள் கட்டி விற்கப்படுவது 17 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது 20,207 யூனிட்டுகள் விற்பனைக்கு வந்ததாகவும் இதில் 18,508 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அலுவலக இடங்கள் அதிக எண்ணிக்கையில் வாங்குவது மற்றும் லீசுக்கு எடுக்கப்படுவது என்ற பிரிவிலும் பெங்களூரு தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களின் அலுவலகங்களும் இங்கே செயல்படுகின்றன. பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்ந்த மனித வளம் அதிகமாக இருப்பதும் அதற்கேற்ற வகையிலான அலுவலக இடங்கள் கிடைப்பதுமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
பெங்களூர்வில் பிரீமியம் அலுவலக இடங்களுக்கான மாத வாடகை என்பது ஒரு சதுர அடிக்கு ஒரு அமெரிக்க டாலராக இருக்கிறது என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. அண்மையில் காலியர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை பெங்களூருவில் 2024 ஆம் ஆண்டின் 21.7 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன , 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 35 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கிறது.
பெங்களூருவில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும், அதேவேளையில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றன. இவ்வாறு பல்வேறு நிறுவனங்களும் பெங்களூருவை நோக்கி படையெடுப்பதன் காரணமாக அங்கே ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.

இந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் சந்தை வளர்ச்சி வேகமாக இருக்கும் நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் பெங்களுருவின் கிழக்கு பகுதியில் இருக்கும் கஞ்சர் என்ற பகுதியில் ரியல் எஸ்டேட் சந்தை நல்ல வளர்ச்சியுடன் இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பார்க்கும்போது இங்கே சொத்துக்களின் விலை 2.5 மடங்கு உயர்ந்திருக்கிறதாம்.
கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுவனங்கள் ஊழியர்கள் மீண்டும் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பெங்களூரில் மீண்டும் ரியல் எஸ்டேட் சந்தை வேகம் எடுத்து இருக்கிறது. குறிப்பாக பிரிமியம் வீடுகளுக்கான தேவை உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ப்ராப் ஈக்விட்டி வெளியிட்டுள்ள தகவலின் படி கஞ்சர் (Gunjur) பகுதி நல்ல வளர்ச்சி அடையும் பகுதியாக இருக்கிறது என கூறுகிறது. இந்த பகுதியில் 2020 ஆம் ஆண்டு ஒரு சதுர அடியின் மதிப்பு 4800 ரூபாயாக இருந்தது அது 2024 ஆம் ஆண்டில் 11,850 என உயர்ந்திருக்கிறது. அதாவது நான்கு ஆண்டுகளில் இந்த பகுதியில் வீடுகளின் மதிப்பு 146 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. வைட்ஃபீல்ட், கோரமங்கலா உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு எளிதில் செல்லும் வகையிலான இணைப்பு பெற்றிருப்பதால் கஞ்சர் பகுதியில் வீடு வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் என பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான சஞ்சீவினி குழுமத்தின் தலைவர் உமேஷ் கவுடா தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த பகுதியில் சிறந்த கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த பகுதியில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கி விட வேண்டும் என எண்ணுகின்றனர் என கூறுகிறார். பலரும் எவ்வளவு விலையானாலும் கொடுக்க தயாராக இருப்பதே இந்த பகுதியில் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கிறார் . பல்வேறு முதலீட்டாளர்களும் புதிதாக வீடு வாங்கபவர்களும் இந்த பகுதியில் ஆர்வம் காட்டுவதால் இங்கே நிலங்களின் மதிப்பு மற்றும் வீடுகளின் மதிப்பு ஆண்டுதோறும் 29 சதவீதம் என சராசரி வளர்ச்சியை எட்டியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
குறிப்பாக இந்த பகுதியை சுற்றி நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துவிட்டால் இந்த பகுதியின் நிலங்களின் மதிப்பு மேலும் உயரும் என தெரிவிக்கிறார். இந்த பகுதியில் 1 முதல் 2 கோடி ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வீடுகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக கூறுகிறார். பல்வேறு நிறுவனங்களும் இங்கே வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் தீவிர கவனம் செலுத்துகின்றன என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
2020 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பகுதியில் 22 ப்ராஜெக்ட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனவாம். இதன் மூலம் இந்த பகுதியில் புதிதாக 8,558 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கிறது மற்றொரு தரவு. 2015 - 2019 வரையிலான நான்காண்டுகளில் இந்த பகுதியில் 13 வீடு திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு 3,421 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. அதுவே கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறது என தெரிவிக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் இங்கே வீடு வாங்கியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. கெம்பகவுடா விமான நிலையத்திற்கும் இங்கிருந்து செல்வது எளிது என்பதால் இங்கே ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட வேகமெடுத்துள்ளது என இந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரு நகரம் தன்னுடைய பெரும்பாலான பொருளாதாரத்திற்கு ஐடி துறையையே சார்ந்துள்ளது. ஐடி துறையின் வளர்ச்சி இங்கே குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், அவர்களுக்கான உணவு விடுதிகள் ஆகியவற்றையும் வளர்ச்சி அடைய செய்கின்றன. ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கவும், ஜிசிசி மையங்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்யவும் கர்நாடக மாநில அரசு பல சலுகைகளை வழங்குவதும் இதற்கு காரணமாக கூறலாம். இருந்தாலும் மக்கள் எண்ணீக்கை அதிகரிக்க அதிகரிக்க போக்குவரத்து நெரிசல், தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்படுகின்றன. அதன் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications