மும்பை: சமூக வலைத்தளங்களில் சிலர் தனித்துவமான காரணங்களுக்காக ட்ரெண்ட் ஆவார்கள். அந்த வகையில் புதுவிதமான ஆடையை உருவாக்கி இன்ஸ்டாவில் பதிவிட்டு ஒரு விற்பனையாளர் சமூக வலைத்தளங்களின் ஸ்டாராக மாறியிருக்கிறார்.
மும்பையில் பயேந்தர் வெஸ்ட் பகுதியில் ஃபேஷன் கேலக்ஸி 123 என்ற பெயரில் துணிக்கடை உள்ளது. இதன் உரிமையாளர் ஷகிர் தன்னுடைய கடை பெயரில் சமூக வலைதளங்களில் பக்கத்தை உருவாக்கி தங்களிடம் உள்ள டிரெண்டான ஆடைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். அப்படி ஃபேஷன் கேலக்ஸி123 க்கு இன்ஸ்டாவில் பக்கத்தை உருவாக்கி வீடியோ மற்றும் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாவில் இதனை கண்டு ஆடைகளை பிடித்திருந்தால் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் அல்லது முகவரியை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் ஷகிர் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோ செம வைரலாகியுள்ளது. சாக்கு பையில் குர்தா செட்டை வடிவமைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். முதலில் அவர் ஒரு சாக்கு பையை காட்டுகிறார், பின்னர் அதனை தனது உடல் அளவுக்கு தகுந்தபடி குர்தா செட்டாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காட்டுகிறார், தொடர்ந்து அந்த குர்தாவை அணிகிறார். இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோ 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது, 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதனை லைக் செய்துள்ளனர்.
பயனாளர்கள் பலரும் இந்த வாலிபரின் புதுமையான யோசனையை பாராட்டி பதிவிட்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த கோனி குர்தா என்று ஒரு பயனரும், ஆர்கானிக் கடை என ஒரு பயனரும் இதற்கு பதில் பின்னூட்டம் தந்துள்ளனர். இந்த புதுமையான கோனி குர்தா, எல், எம், எக்ஸ் எல் ஆகிய அளவுகளில் கிடைப்பதாக அந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஷ் ஆன் டெலிவரி அல்லது ஆன்லைன் பேமெண்ட் மூலம் பணத்தை செலுத்தலாம் என்றும், இந்தியா முழுவதும் இந்த ஆடையானது டெலிவரி செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃபேஷன் கேலக்ஸியின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணையும் அவர் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த கோனி குர்தா தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாக். இந்த நவீன யுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கூடிய விரைவில் இதுவே ஒரு ஃபேஷன் டிரெண்டாகவும் மாறும் வாய்ப்புள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications