தமிழ்நாட்டின் கடற்கரை நகரமான தூத்துக்குடி, மாநிலத்தின் அடுத்த ஓசூர் ஆக மாற தயாராக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சென்னையைத் தாண்டி தற்போது இரு நகரங்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
அதில் ஒன்று கோயம்புத்தூர் மற்றொன்று ஓசூர். இதில் கோவை ஐடி மற்றும் சேவை துறையில் ஹப் ஆக மாறி வரும் வேளையில், ஓசூர் உற்பத்தித் துறையில் ஹப் ஆக மாறியுள்ளது. இந்த நிலையில் ஓசூர்-க்கு இணையாகத் தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடி வளர்ந்து வருகிறது.

மெகா முதலீடு: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஹைட்ரஜன், எலக்ட்ரிக் வாகனங்கள் (Automobile EV), பர்னிச்சர் (Furniture), சோலார்/காற்று மற்றும் விண்வெளி துறைகள் போன்ற துறைகளில் ரூ.1,40,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் வர உள்ளன என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி - தொழில் துறை வளர்ச்சிக்கான களம்: தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் பெரும் விரிவாக்கத்தையும், நகர விமான நிலையத்தையும் பெறவுள்ளது. இதன் காரணமாகப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நகரத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.
ஹைட்ரஜன் மையமாக தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு மாநிலத்தைப் பசுமை ஹைட்ரஜன் ஹப்பாக மாற்றுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியில் ஹைட்ரஜன் துறையில் அதிக முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைட்ரஜன் எரிபொருள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாதது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகும். இது தற்போதும் நாம் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கு மாற்றுத் தேர்வாக இருக்கும்.
தொழில் வளர்ச்சியின் நன்மைகள்: தூத்துக்குடியில் இந்த புதிய முதலீடுகள் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுடன், மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தின் தனிநபர் வருமானம் பிற முன்னணி மாவட்டத்திற்கு இணையாக வளரும்.
மேலும், இதன் காரணமாகக் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் முதலீடுகள் அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் பெற முடியும். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் கலரே அடுத்த 10 வருடத்தில் பெரிய அளவில் மாறப்போகிறது.
எதிர்கால பயணம்: தூத்துக்குடி தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வருவதை இப்போதே காண முடிந்தாலும், அதன் உண்மையான தாக்கம் அடுத்த 5 வருடத்தில் தற்போது முதலீடுகளை அறிவித்துள்ள நிறுவனங்களின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்த உடன் தான் தெரியும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் முயற்சிகளாலும், தனியார்த் துறையின் ஆதரவாலும் தூத்துக்குடி தமிழ்நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications