குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இஸ்ரோ சார்பில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் கூடல் நகர் பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் இஸ்ரோ ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுகிறது.

இந்நிலையில் சிறிய ரக ராக்கெட்டுகளுக்கான ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் கூடலூர் பகுதியில் அமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் தளத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ரோகிணி ஹெச் என்ற சிறிய ரக ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 5 . 24 கிலோமீட்டர் உயரத்தை எட்டி 121.48 கிலோமீட்டர் தூரம் சென்று கடலில் விழுந்தது.
ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் இடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இஸ்ரோவை பொறுத்தவரை விண்வெளி திட்டங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் இந்த சிறிய ஏவு தளத்தை அமைக்கிறது. 2,233 ஏக்கர் நிலத்தில் இந்த ராக்கெட் ஏவுதளம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவுதளம் மற்றும் அதற்கான அலுவலக கட்டுமான பணிகள் ஓரிரு ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவை பொறுத்தவரை இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளின் செயற்கை கோளையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இஸ்ரோ குறைந்த கட்டணத்தில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதால் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு செயற்கை கோள்களை இந்தியா மூலம் விண்ணில் செலுத்துகின்றன.
தற்போதைக்கு இஸ்ரோ ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் செலுத்துவதால் கூடுதலாக ஏவுதளம் தேவைப்படுகிறது.
எனவே தான் குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது. 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கிறது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரைக்கு அருகே உள்ளது, இதற்கு தெற்கே எந்த நிலப்பரப்பும் இல்லை. எனவே ராக்கெட்டுகளை ஏவுவதற்கு இது பொருத்தமான இடமாக இருக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications