சென்னை: EPFO எனப்படும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய ஆண்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஈ வாலெட்டில் கிளெய்ம்: ஈபிஎஃப்ஓ மற்றும் ஈஎஸ்ஐசி சந்தாதாரர்கள் தங்களுடைய செட்டில்மெண்ட் தொகையை நேரடியாக ஈ வாலட்டுகள் மூலம் கிளெய்ம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் சுனிதா தாவாரா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூடிய விரைவில் ஈபிஎஃப்ஓ மற்றும் ஈஎஸ்ஐசி சந்தாதாரர்கள் தங்களுடைய செட்டில்மெண்ட் தொகையை கோரும் நடைமுறை எளிமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வங்கி அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி உரிய திட்டம் வகுக்கப்பட்டு எளிமையாக ஈ வாலட்டுகளில் இருந்து செட்டில்மெண்ட் பெறக்கூடிய வசதி கொண்டுவரப்படும் என கூறியுள்ளார்.
ஓய்வூதிய விண்ணப்பங்கள்: அதிக ஊதியத்தில் இருந்தோரின் ஓய்வூதியத்திற்காக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான தேதியை நீட்டித்துள்ளது. இதன்படி நிலுவையில் இருக்கும் பென்ஷன் விண்ணப்பங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கூடுதல் விளக்கம் கோரிய 4.66 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு வரும் 15ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுக்கலாம்: தற்போது நமது பிஎஃப் கணக்கில் இருந்து அவசர தேவைகளுக்கு நாம் பணம் எடுக்க முடிகிறது. இவ்வாறு பணம் எடுக்க வேண்டும் என்றால் நாம் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும், இதனை அடுத்து அதிகாரிகள் நமது விண்ணப்பத்தை பரிசீலனை செய்வார்கள் . அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பின்னரே பணம் நமது வங்கி கணக்குக்கு வரும். தற்போது இது நீண்ட நடைமுறைகளை கொண்டதாக இருக்கிறது. இதனை மாற்றுவதாக ஈபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.
இதன்படி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெபிட் கார்டினை போன்ற ஒரு கார்டு வழங்கப்படும். இந்த கார்டினை நாம் ஏடிஎம்களில் பயன்படுத்தி பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியும். நமது பிஎஃப் கணக்கில் இருக்கும் குறிப்பிட்ட சதவிகிதத்திலான தொகையை மட்டுமே நாம் பிஎஃப் கணக்கில் இருந்து எடுக்க முடியும். இதற்கு ஏற்ற வகையில் பிஎஃப் அமைப்பில் தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 2025ஆம், ஆண்டில் ஈபிஎஃப்ஓ அமைப்பு நவீனப்படுத்தப்பட்டு டிஜிட்டல் ரீதியாக பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இவை சந்தாதாரர்களுக்கான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் வகையில் அமைய இருக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications