ஹெல்த்கேர் நிறுவனமான தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணியின் வாழ்க்கைக் கதை நெகிழ்ச்சி, உறுதி மற்றும் கடினமான நேரங்களை கொண்டது. இவர் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் மிகப்பெரிய ஹெல்த்கேர் நிறுவனங்களில் ஒன்றான தைரோகேர் டெக்னாலஜிஸை நிறுவுவது வரை, அவரது பயணம் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் மருத்துவத்துறையில் மாற்றம் செய்தசெய்த ஒரு மனிதனின் வாழ்க்கை பாடம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஆரோக்கியசாமி வேலுமணி என்பவர் தற்போது இந்திய தொழிலதிபராக வளம் வருகிறார். தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நோயறிதல் மற்றும் நோய்தடுப்பு பராமரிப்பு ஆய்வகங்களின் நிறுவனர் ஆவார். அவர் நியூக்ளியர் ஹெல்த்கேர் நிறுவனரும் கூட. இது தைரோகேருடன் இணைந்த கதிரியக்க நோயறிதல் நிறுவனமாகும். தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நோயறிதல் மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆய்வகங்களில் ஒன்றாகும். இது கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா முழுவதும் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 1,122 விற்பனை நிலையங்கள், சேகரிப்பு மையங்களைக் கொண்டுள்ளது.

யார் இந்த ஆரோக்கியசாமி வேலுமணி?: தைரோகேர் நிறுவனர் வேலுமணி கடந்த ஏப்ரல் 1959 இல் கோயமுத்தூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கிராமத்தில் நிலமற்ற விவசாயியாக ஏழ்மையான சூழ்நிலையில் இருந்தவர். அப்போது வேலுமணியின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் வறுமையில் இருந்து வந்துள்ளது. அவரது தந்தையால் அவருக்கு ஒரு ஜோடி செருப்பு கூட வாங்கி கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும், தன் குடும்பத்திற்கு வரும் சவால்களை எதிர்கொண்டு வேலுமணி தானும் தனது உடன்பிறப்புகளும் கல்வியை கற்க கடுமையாக உழைத்துள்ளார். அதனாலே தினமும் பள்ளிக்கு அவர், 6 கி.மீ பயணம் செய்வார் என்று கூறப்படுகிறது. அப்போது சைக்கிள் என்பது அவருக்கு ஆடம்பரப் பொருளாக இருந்துள்ளது. அவரது தாயார் அவரை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தாராம். குறைந்த செல்வத்தை வைத்திருந்தாலும், அவற்றை நிர்வகிக்கவும், கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளாராம்.
ஆரம்பகால போராட்டங்கள்: வேலுமணி ஆரம்பகாலத்தில் பள்ளிபடிப்பை முடித்து மேற்படிப்பை தொடர மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது படிப்பை தொடர இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தாராம். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால், அவர் பிஎஸ்சி படிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அப்போதைய நிலையில் பி.காம் படிப்பை விட 100 ரூபாய் அதிகம் என்பதால், பண நெருக்கடி காரணமாக 300க்கு பி.காம் தேர்வு செய்து ஒரு மாதம் மட்டும் பி.காம் படித்தாராம். அப்போது இதை கேள்விபட்ட அவரது ஆசிரியர் டாக்டர்.கே.ஆர்.கார்த்திகேயன் அவரிடம் தனது பணப்பையில் இருந்து நூறு ரூபாயை கொடுத்த அவர் பிஎஸ்சி படிக்க உதவியுள்ளார்.
ஒருவழியாக கடந்த 1978 ஆம் ஆண்டில் வேலுமணி வேதியியலில் பட்டம் பெற்றார். அப்போதைய நிலையில், வேலை கிடைப்பதில் சவால்களையும் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அனுபவம் இல்லாததால் தொடர்ச்சியாக 15 நேர்காணல்களில் தோல்வியடைந்த அவர் எப்போதாவது ஒரு நிறுவனத்தை உருவாக்கினால், புதியவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவது என்று முடிவு செய்துள்ளார். இதற்கிடையில், கோயம்புத்தூரில் உள்ள ஜெமினி கேப்ஸ்யூல்ஸ் என்ற சிறிய மருந்து நிறுவனத்தில் ஷிப்ட் வேதியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். அந்த நேரத்தில் மாதம் 150 ரூபாய் என்ற குறைவான சம்பளம் கிடைத்தாலும், தனக்கென 50 ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு, மாதம் 100 ரூபாய் வீட்டிற்கே அனுப்பி வந்துள்ளார்.
BARC-ல் வேலை: இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் மூடப்பட்டபோது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில், வேலுமணி கோயம்புத்தூரில் உள்ள மத்திய நூலகத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு அவர் மும்பையில் உள்ள புகழ்பெற்ற பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) அறிவியல் உதவியாளருக்கான வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு நிற குருட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரது இந்த மருத்துவ மதிப்பீட்டின் காரணமாக பின்னடைவு சந்தித்த போதிலும், இறுதியில் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1982ல் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு ரயிலில் ஏறி ட்ரீம்ஸ் நகருக்கு சென்ற அவர், BARC இல் பணியாற்றியுள்ளது. அப்போது அவரது பணியானது தைராய்டு பரிசோதனையை செய்வதாகும். இது பின்னர் அவரது தொழில் முனைவோராக மாற விரும்பிய அவரது பயணத்தின் அடித்தளமாக மாறியது.
ஆரோக்கியசாமி வேலுமணி திருமணம்: அந்த நேரத்தில்தான், அவரது மாமனாருக்கு வேலுமணி மிகவும் பிடித்தவராக இருந்துள்ளார். அப்போது, வேலுமணிக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க விரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது திருமணத்தை நிராகரிக்க அவரை சந்திப்பதை நிறுத்த பல பொய்களை பேசி வந்துள்ளார். ஆனால், ஒரு காலகட்டத்தில் மாமனார் அவரது மகளை சந்திக்க வைத்துள்ளார். அப்போது இருவருக்கும் ஒரு மணி நேர உரையாடல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் வேலுமணி மட்டுமே 55 நிமிடங்கள் பேசியுள்ளார். 5 நிமிடங்கள் முழு மௌனமாக இருந்துள்ளார். வேலுமணி அந்த பெண்ணிடம் பல நிபந்தனைகளை முன்வைத்து, அதற்கு சம்மதம் தெரிவித்தால் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கேட்டுக்கொண்டாராம். இதற்கிடையில், அன்று மாலையே அப்பெண் நிபந்தனைகளை ஏற்று திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். அதன்படி கடந்த 1986 ஆண்டு வேலுமணிக்கும், அப்பெண்ணிற்கும் திருமணம் ஆனது.
வேலை ராஜினாமா: திருமண வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள், வேலுமணி தனது வாழ்க்கையைப் பற்றி யோசித்து, நான் வாழ வந்தேனா அல்லது வெற்றி பெற வந்தேனா? என்று கேட்டுக் கொண்டதாகவும், நான் பெரியவராக ஆக வேண்டுமா அல்லது வயதாக வேண்டுமா அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமானால் கோவையிலும் வாழலாம் என்பதை தனக்குள்ளே கூறிகொண்டாராம். அப்போது, மும்பைக்கு வருவதென்பது ரிஸ்க் எடுப்பதற்கும், இன்னும் அதிகமாக முயற்சி செய்வதற்காக இருக்க வேண்டும் என்று உணர்ந்த அவர், தனது சேமிப்பை மதிப்பிட்டு, 40 மாத குடும்பச் செலவுக்கு போதுமான அளவு சேமிப்பை வைத்திருந்துள்ளார்.
அப்போது அவரது மனைவியும் எஸ்பிஐ நிறுவனத்தில் பணிபுரிந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஏதாவது தொடங்க முடிவு செய்துள்ளார். அப்போது கவலைபட்டு கொண்டிருந்த வேலுமணியிடம் அவரது மனைவி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு காரணத்தைக் கேட்டுள்ளார். வேலுமணி எல்லாவற்றையும் விளக்கிய பிறகு, நீ போகாவிட்டால் நானும் போகமாட்டேன் என்று பதிலளித்தார்.
அதற்கு வேலுமணி, ஒன்றாக வாழ்வோம் அல்லது ஒன்றாக இறப்போம் என்று கூறியுள்ளார். இதன் விளைவாக, தம்பதியினர் ஒரே நாளில் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளது. அவர்களுடைய வயது வெறும் 5 மற்றும் 3 வயது மட்டுமே.
தைரோகேரின் ஆரம்பம்: 14 வருடங்கள் BARC இல் இருந்து தைராய்டு உயிர் வேதியியலில் முனைவர் பட்டப்படிப்பை முடித்த வேலுமணி தனது தொழில் முனைவோர் கனவை நினைவாக்க, கடந்த 1995 ஆம் ஆண்டில், தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து, மும்பையில் உள்ள பைகுல்லாவில் தைராய்டு கோளாறுகளைக் கண்டறியும் பரிசோதனை வசதியை ஏற்படுத்தினார். அப்போது தைராய்டு பரிசோதனையை இந்தியாவின் ஏழைகளுக்கு மலிவு விலையில், சந்தைச் செலவின் ஒரு பகுதியிலேயே சேவைகளை வழங்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
ஒரு பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்குதல்: தைரோகேரின் வணிக மாதிரியானது, பல ஆய்வகங்களில் இருந்து மாதிரிகளை ஒருங்கிணைத்து, அவற்றை மையமாகச் செயல்படுத்தி, பெரிய அளவிலான பொருளாதார வளத்தை அடைவதை அடிப்படையாகக் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது விலைகளை குறைவாக வைத்திருப்பதன் மூலமும், செயல்பாட்டுத் திறனில் கவனம் செலுத்துவதன் மூலமும், தைரோகேர் விரைவாக வளர்ந்தது. நிறுவனம் தைராய்டு பரிசோதனையில் இருந்து நோய்தடுப்பு சுகாதார பரிசோதனைகள் மற்றும் பிற கண்டறியும் சேவைகள் வரை விரிவடைந்து இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சேகரிப்பு மையங்களின் பரந்த வலையமைப்பை நிறுவியது.
கடந்த 2016 ஆம் ஆண்டில், தைரோகேர் ஐபிஓவிற்கு வந்தது. அப்போது, 73 மடங்கு அதிகமாகச் சந்தா செலுத்தப்பட்டது. இதற்கிடையில், கடந்த 2020 ஆம் ஆண்டுக்குள், தைரோகேர் நிறுவனம் ரூ. 474 கோடி வருவாயையும் ரூ. 119.7 கோடி லாபத்தையும் ஈட்டியது. இது இந்தியாவின் ஹெல்த்கேர் நோயறிதல் துறையில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.
விற்பனை முடிவு: கடந்த ஜூன் 2021 இல், வேலுமணி தைரோகேரில் தனது 66% பங்குகளை PharmEasy இன் தாய் நிறுவனமான API ஹோல்டிங்ஸுக்கு 4,546 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்தபோது அந்த நேரத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை வாங்கும் ஸ்டார்ட்அப் முதல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். வேலுமணி இந்த ஒப்பந்தத்தில் அவருக்கு பெரும் ஏற்றத்தை கொடுத்தது. இதனால், PharmEasy நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்பினார். அப்போது ஏபிஐ ஹோல்டிங்ஸில் 4.9% பங்குகளை அவர் தக்கவைத்துக்கொண்டார். இதனால் அவரை புதிய முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றினார்.
தைரோகேருக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை: விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, புதிய முயற்சிகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேலுமணி திட்டமிட்டுள்ளார். உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால், எத்தகைய தடைகளையும் வென்று சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அவரது பயணம் பலருக்கு உத்வேகமாக அமைந்தது.
டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணியின் மனைவி யார்?: ஆரோக்கியசாமி வேலுமணியின் மனைவி சுமதி வேலுமணி. அவனுடைய முழுப் பயணத்திலும் அவள் முதுகெலும்பாக இருந்துள்ளார். கணைய புற்றுநோயின் நிலை 4 காரணமாக IPO களை பட்டியலிடுவதற்கு 50 நாட்களுக்கு முன்பு வேலுமணி தனது மனைவியை இழந்தார். முழு பயணத்தின் முக்கியமான உறுதுணையாக விளங்கிய அவரின் இறப்பு அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால், அவர் இப்போதும் தனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது மனைவி என்று அவரை பற்றி அடிக்கடி பேசி வருகிறார். மேலும் அவரது உயர்வு மற்றும் தாழ்வுகளில் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணியின் நிகர மதிப்பு என்ன?: அவரது வருமானம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணியின் நிகர மதிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டின்படி, அவரது பங்குகளை விற்ற பிறகு 5000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், அவர் சில ஸ்டார்ட்அப்களில் பணத்தை இழந்தார்.
டாக்டர் வேலுமணியின் பாரம்பரியம் அவரது வணிக சாதனைகளுக்கு அப்பாற்பட்டது. வணிகத்திற்கான அவரது சேவை அணுகுமுறை, செலவு-செயல்திறனில் கவனம் செலுத்துதல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட மாற்றுவதற்கான பார்வை ஆகியவை தொழில்துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையான வெற்றி என்பது நிதி ஆதாயங்கள் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்பதை அவர் காட்டியுள்ளார். இளம் தொழில்முனைவோர் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துமாறு அவர் அடிக்கடி அறிவுறுத்தி வருகிறார்.
தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணியின் இந்த பயணம், துன்பங்களைச் சமாளித்து, புதுமைகளைத் தழுவி, வெற்றியை அடைய அவர் பெற்ற வலி ஆகியவை அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தங்கள் உணர்வுகளைத் தொடரத் துணிபவர்களுக்கு எந்தக் கனவும் பெரிதல்ல, எந்தத் தடையும் பெரிதல்ல என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications