தைரோகே நிறுவனர் டாக்டர் வேலுமணி 5 ஸ்டார் ஹோட்டலில் ஒரு நிகழ்வில் பங்கேற்று விட்டு வாடகை காரில் வீட்டுக்கு திரும்பிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்தியாவில் தைரோகேர் என்ற நிறுவனத்தை தொடங்கி தைராய்டு தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை எளிமையாக்கியவர் டாக்டர் வேலுமணி. புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்பும் பலருக்கும் இவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் . தன்னுடைய எளிமையால் அனைவரையும் கவரக்கூடியவர். அண்மையில் இவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓலாவில் கார் புக் செய்து வீடு திரும்பியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள டாக்டர் ஏ வேலுமணி, " இரவு விருந்தினை முடித்துவிட்டு நான் ஓலா கார் புக் செய்து அதற்காக காத்திருந்தேன். அப்போது பலரும் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக கேட்டுக் கொண்டிருந்தனர். பல்வேறு அதிநவீன ஆடம்பர கார்கள் அங்கே வரிசையில் நின்று கொண்டிருந்தன.
நான் ஓலா வாடகை காரில் ஏறி அமர்ந்த போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது இரவு 10:30 மணியளவில் நடந்தது. ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆடம்பர காரில் போகாமல் வாடகை காரில் செய்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது" என கூறியுள்ளார்.
"ஆனால் நான் இந்த முடிவை மிகத் தெளிவாகத் தான் எடுத்திருக்கிறேன். நீங்கள் உயரத்தில் இருக்கும் போது அமைதியாக இருக்க வேண்டும், சிக்கனமாக இருக்க வேண்டும், தாழ்மையுடன் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். ஈஎம்ஐ போட்டு உயர்தரமான கார் வாங்கினால் உங்களுக்கு செயற்கையான உணர்வு தான் கிடைக்கும், வாடகை கார் நிச்சயம் உங்களுக்கு அமைதியை தரும் என அவர் கூறியுள்ளார்.
வேலுமணியின் இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றிருக்கிறது. பலரும் அவருடைய எளிமையையும் அவருடைய அறிவுரையும் பாராட்டியுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கும் வேலுமணி மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். என்னுடைய 10 வயதில் இருந்தே நான் இப்படித்தான் இருக்கிறேன். என்னுடைய தாயார் சிறுவயதிலேயே எனக்கு இதனை கற்றுக் கொடுத்துவிட்டார் என கூறியுள்ளார்.
என்னுடைய மனைவியும் இதையே பின்பற்றுகிறார் அதனால் எனக்கு எந்த ஒரு அழுத்தமும் கிடையாது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். சிலர் என்னுடைய எளிமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர், ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் என்னை பின் தொடர்கின்றனர் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வேலுமணி இந்தியாவில் நோயறிதல் பரிசோதனை நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தைரோகேர் நிறுவனத்தை தொடங்கி வெற்றி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை தொடங்கினார்.
இரத்த பரிசோதனை குறிப்பாக தைராய்டு சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனைகளை லட்சக்கணக்கானவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்த்த பெருமை தைரோகேர் நிறுவனத்தை சாரும். இவர் 2021 ஆம் ஆண்டு 4500 கோடி ரூபாய்க்கு தைரோகேர் நிறுவனத்தை விற்பனை செய்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications