தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் மற்றும் தொழில்நுட்ப மையமாக ஓசூரை உருவாக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது .சென்னையில் எப்படி ஓஎம்ஆர் சாலை ஐடி சேவை நிறுவனங்களுக்கான ஒரு மையமாக மாறி இருக்கிறதோ அதேபோல ஓசூரை ஒரு அறிவுசார் மையமாக மாற்றுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிறது.
ஓசூரில் ஏற்கனவே விமான நிலையம் அமைக்கும் பணிகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன, அதேபோல ஓசூருக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடும் நடத்தப்பட்டது. ஓசூருக்கு என டிரேட் சென்டர் எனப்படும் வர்த்தக மையத்தை கட்டுவதற்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது . இதன் அடுத்த கட்டமாக ஓசூரில் அவுட்டர் ரிங் ரோடு ,சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு மற்றும் முக்கிய பைபாஸ் சாலைகள் வழியாக அறிவு சார் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஆலோசகரை நியமனம் செய்ய தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ டெண்டர் கோரி இருக்கிறது. இந்த அறிவு சார் வழித்தடம் என்பது கல்வி, ஆராய்ச்சி ,புதுமை, தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய செயல்பாடுகளுக்கான ஒரு மையமாக உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.
ஓசூரை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து முக்கிய சாலைகளிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்டவை இதன் ஒரு பகுதியாக அமைக்கப்பட இருக்கின்றன. சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட ஒரு பகுதியாக மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
ஓசூர் அறிவு சார் வழித்தடத்திற்கான இந்த திட்ட ஆய்வு அறிக்கை தயாரித்து வழங்கப்பட்டவுடன் அரசு அந்த அறிக்கையை ஆய்வு செய்து ஜனவரி மாதம் முதலே அதற்கான பணிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என சொல்லப்படுகிறது . நவீன நகர்ப்புற வசதிகள், டிஜிட்டல் ரீதியிலான இணைப்பு ,உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவை நிறைந்த பகுதியாக இந்த ஓசூர் அறிவுசார் வழித்தடம் இருக்கும் என சொல்லப்படுகிறது .
அடுத்த 30 ஆண்டு காலத்திற்கு இந்த பகுதியில் என்னென்ன அமையலாம் எங்கெங்கு அமைக்கலாம் , என்ன மாதிரியான நிறுவனங்கள் இங்கே வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது இதற்கு எவ்வளவு நிலம் தேவை என்பன உள்ளிட்ட அனைத்து மாஸ்டர் பிளான்களும் உள்ளடக்கிய ஒரு திட்டமாக இந்த அறிக்கை இருக்கும் என சொல்லப்படுகிறது . இந்த திட்டம் நிறைவேறினால் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக பெங்களூரு செல்பவர்கள் இனி ஓசூரிலேயே வேலைவாய்ப்பை பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications