திருவண்ணாமலை: தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைக்காக இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி பெரு நகரங்களோடு நின்று விடாமல் மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் அதனை பரவலாக்க வேண்டும் என முடிவு செய்தது.
இதற்காக தமிழ்நாடு அரசு சென்னையில் எப்படி டைட்டில் பார்க் செயல்படுகிறதோ அதேபோல மற்ற மாவட்டங்களில் மினி டைடல் பூநியோ என்ற பெயரில் சிறிய அளவிலான டைடல் பார்க்குகளை அமைத்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பார்த்குகள் கட்டப்படும் என அண்மையில் அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

முதல் கட்டமாக திருவண்ணாமலையில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு டைடல் நிறுவனம் ஒப்பந்தம் கோரி இருக்கிறது. திருவண்ணாமலையில் அமைய இருக்க கூடிய இந்த மினி டைடல் பார்க் தரைத்தளம் மற்றும் நான்கு அடுக்குமாடிக்கொண்ட ஐடி பூங்காவாக இருக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் இங்கே தங்களுடைய அலுவலகங்களை நிறுவ முடியும். இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஐடி சார்ந்த வேலை வாய்ப்புகளை தங்கள் மாவட்டத்திற்குள்ளேயே பெறுவார்கள்.
பள்ளிக்கல்வி, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய மூன்று பிரிவுகளிலும் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு.ஆண்டுதோறும் உயர்கல்வி முடித்துவிட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் நுழையும் நிலையில் அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் பெருநகரங்களோடு நின்றுவிடாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சேர வேண்டும் என அரசு எண்ணுகிறது.
மேலும் வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான மக்கள் நகரங்களை நோக்கி பயணிப்பதை தடுத்து விட்டு வேலை வாய்ப்புகள் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேர வேண்டும் என முடிவு செய்து தான் தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் எனப்படும் டைடல் நியோக்களை அமைத்து வருகிறது. இதன்படி 50000 சதுர அடி இல் இருந்து 1 லட்சம் சதுர அடி பரப்பளவிற்குள் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. டைடல் நிர்வாகமே இந்த பணிகள் முழுவதையும் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விழுப்புரத்திலும் , தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்திலும் மினி டைடல் பூங்காவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications