தமிழ்நாடு அரசு சமீபத்தில் திறந்த தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி டைடல் நியோ பூங்காக்கள் வெற்றிகரமாக அனைத்து அலுவலகங்களும் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அனைத்து இருக்கைகளும் நிரம்பியதைத் தொடர்ந்து, தற்போது சேலத்தில் உள்ள டைடல் நியோ பூங்காவும் முழுமையாக நிரம்பியுள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் அதிகரித்து வரும் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் வருகையையொட்டி அலுவலக இடங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் ஐடிதுறை வளர்ச்சியால் பல மாவட்டத்தை வேகமாக வளர்ச்சி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து டைடல் நியோ பூங்காக்களை திறந்து வருகிறது.

சேலம், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி மூன்று டைடல் நியோ பூங்காக்களும் முழுமையாக நிரம்பியது, இந்த பகுதிகளில் இத்தகைய வசதிகளுக்கான தேவை மற்றும் அவசியத்தையும் உணர்ந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகளுக்கு பிள்ளையார் சுழிப்போடப்பட்டு உள்ளது.
தற்போது இந்த மூன்று பூங்காக்களும் முழுமையாக நிரம்பியுள்ளது, இந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யப்பட்ட நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளையும் இது அதிகரித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர், ஐடி துறை அமைச்சரும் வேகமாக செயல்பட்டு வருகின்றனர்.
டைடல் நியோ பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் மூலம், இரண்டாம் கட்ட நகரங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப்பூர் கிராமத்தில் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா, சேலம் மாவட்டத்தின் ஐடி துறையின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.
அடுத்த டைடல் பார்க்: திருப்பூரில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையமான டைடல் நியோ பூங்காவின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இந்த மினி டைடல் பார்க், எட்டு தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 66,139 சதுர அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்படும் இந்த தகவல் தொழில்நுட்ப மையம், திருப்பூர் பகுதியில் ஐடி துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐடி ஹப் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications