இன்றெல்லாம் பெற்றோர்கள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை டாப் கல்லூரிகளில் படித்தால்தான் அதற்கு தகுந்தாற் போல் வேலை கிடைக்கும், அதிலிருந்து நிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணுகின்றனர். அதற்காக பணத்தை பாராது, செலவு செய்து படிக்கின்றனர். இப்படி படித்தும் சிலருக்கு வேலை இல்லாமல் இருக்கும் சூழலே நிலவி வருகிறது. ஆனால் டயர் 3 கல்லூரியில் படித்துவிட்டு, வருடம் முழுவதும் ஒருவர் பெரும் சம்பளத்தை ஒரே மாதத்தில் பெற்று வருகிறார் புனேவை சேர்ந்த இளைஞர்.
ஆம்.. பலரும் 1 வருடம் காத்திருந்து சம்பாதிக்கும் தொகையை அஜிங்க்யா நலம்வார் என்ற 35 வயது ஐடி ஊழியர் ஒரே மாதத்தில் சம்பாதித்து வருகிறார். அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்ததே இவருடைய இந்த அசாத்திய வருமானத்திற்கு காரணமாக அமைந்தது. டாலரில் சம்பாதித்து இந்தியாவிலேயே எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருடைய வருமானத்தில் சுமார் 60 சதவீதத்திற்கு மேலான தொகையை சேமித்தும் வருகிறார்.
சமீபத்தில் அஜிங்கியா ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு தனக்கு எப்படி ரிமோட் ஜாப் கிடைத்தது என்பது குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார். அவருக்கு வேலை ஒரே நாளில் கிடைக்கவில்லை. ஐடி துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்று அதில் 6 ஆண்டுகள் ஸ்க்ரம் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்தார்.வேலையிலிருந்து ராஜினாமா செய்த அனைவரும் வேறொரு வேலையை தேடி அலைவார்கள் தானே. ஆனால் அஜிங்கியா அப்படி செய்யவில்லை.

அதற்காக அவர் செய்தது ஒன்றே ஒன்று தான். தன்னுடைய லிங்க்டின் ப்ரோபைலை மட்டும் அப்டேட் செய்து கொண்டே இருந்துள்ளார். தனது ப்ரொபைலில் அவர் என்ன வேலை செய்கிறார்?, அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது?, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்த நிறுவனங்களின் மேனேஜர்களுக்கு அவரின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் HR தொடர்பு கொண்டுள்ளார். அப்போதும் அவர் ஒரே இன்டர்வியூவில் செலக்ட் ஆகவில்லை. பல ரௌண்டுகள் வைத்து தேர்வு செய்துள்ளனர். பிறகு 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃப்ளோரிடாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
அங்கு அவருக்கு மாத வருமானமாக 6,000 அமெரிக்க டாலர்கள் வழங்ப்படுகிறது. வங்கிக்கு செலுத்தும் கட்டணம், இதர வரி போன்றவற்றையெல்லாம் சேர்த்து பார்த்தால் இந்திய மதிப்பில் அவருடைய கைக்கு மாதத்திற்கு ரூ. 5.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய மாத சம்பளத்தை பெறுபவர் நல்ல செலவாலியாக இருப்பார் என்று தானே யோசிக்கிறீர்கள். இவ்வளவு பணம் கிடைத்தாலும் இன்னும் அஜின்கியா மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.
தற்போது அஜின்கியா புனேவில் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மாத செலவுகள் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளன. வீட்டு வேலை செய்பவர்களுக்கான சம்பளம், மின்சார கட்டணம், பெட்ரோல் மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு அஜிங்கியா ஒவ்வொரு மாதமும் ரூ.85,000 செலவு செய்கிறார். வாடகை மற்றும் இஎம்ஐ தொல்லை அவருக்கு கிடையாது.தனது வருமானத்தை வைத்து ஒரு சொந்த வீட்டை வாங்கி விட்டார்.
மகளின் பள்ளி செலவுக்கு ரூ.5,000 செலவு செய்கிறார். அவருடைய எதிர்கால முதலீட்டுக்காக மாதம் தோறும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார். அதோடு தனது மொத்த வருமானத்தில் 60 முதல் 62 சதவீதம் வரை தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்.
முறையான பயிற்சி பெற்று நீங்கள் செய்யும் வேலையை உலகில் உள்ள பெரு நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் புத்திசாலித்தனம் இருந்தால் போதும்.. இந்தியாவில் இருந்து கொண்டே உலகளவில் சம்பாதிக்கலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications