சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் பைட் டான்ஸ் நிறுவனர் ஜாங் யிமிங் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹூரன் சீனாவின் 2023 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் ஆகியவற்றை தொடர்ந்து ஹூரன் பட்டியலில் இடம்பெறுவதும் மதிப்புமிக்க விஷயமாகப் பார்க்கப்படும் வேளையில் இன்று சீனாவின் பணக்கார பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக உலக நாடுகளில் இருந்து முதலீடுகள் சீனா பக்கம் திரும்பியிருக்கும் வேளையில் பல முன்னணி நிறுவனங்களின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சீன பங்குச்சந்தை இப்புதிய முதலீடுகள் மூலம் புத்தூயிர் பெற்றுள்ளது.

இந்த முக்கியமான சூழ்நிலையில் சீனாவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது, அந்நாட்டின் வர்த்தக துறையில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. சீன அதிபரான ஜி ஜின்பிங் கடந்த சில வருடங்களாக சீனாவின் டெக் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் நெருக்கடி கொடுத்து வந்த காரணத்தால் பல முன்னணி டெக் நிறுவன பங்குகள் தடாலடியாக சரிந்து, சீன டெக் துறை பல டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்தது.
இப்படி பல தடைகளைத் தாண்டி வந்த TIKTOK உருவாக்கிய பைட் டான்ஸ் நிறுவனர் ஜாங் யிமிங் முதல் முறையாக சீன பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 49.3 பில்லியன் டாலராக உள்ளது, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4.14 லட்சம் கோடி ரூபாய்.
பைட் டான்ஸ் நிறுவனர் ஜாங் யிமிங் எழுச்சி மூலம் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த குடிநீர் பிராண்டான நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனர் ஜாங் ஷான்ஷானை 2வது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
1980களில் பிறந்த முதல் நபராக ஜாங் யிமிங் ஹூரன் பட்டியலின் உச்சத்தை அடைந்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பிரபல வீடியோ-ஷேரிங் தளமான TikTok மற்றும் அதன் சீன வடிவமான Douyin ஆகியவற்றின் தாய் நிறுவனம் தான் இந்த ByteDance.
பாட்டில் தண்ணீர் உற்பத்தியாளரான நோங்ஃபு ஸ்பிரிங்கின் நிறுவனர் ஜாங் ஷான்ஷானின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளதே ஜாங் யிமிங் முதல் இடத்தை பிடித்ததற்கான காரணமாக உள்ளது.
மூன்றாவது இடத்தை டென்சென்ட் நிறுவனர் போனி மா பிடித்துள்ளார். 44.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், டென்சென்ட்டின் கேமிங் பிரிவின் வருவாய் அதிகரிப்பால் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. டாப் 3 இடத்தில் 2 இடத்தை டெக் பில்லியனர்கள் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications