சீனாவை சேர்ந்த பிரபல டிக்டாக் நிறுவனம் சர்வதேச அளவில் சுமார் 500 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஒரு வீடியோ சார்ந்த சமூக வலைத்தளமாக டிக் டாக் செயலி இருக்கிறது. இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டு விட்டாலும் வெளிநாடுகளில் தொடர்ந்து இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் சுமார் 200 நகரங்களில் தங்களின் அலுவலகங்களை செயல்படுத்தி வருகிறது. 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் டிக்டாக் செயலியில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையே டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் , தங்கள் நிறுவனத்திலிருந்து சுமார் 500 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மலேசியாவில் இருக்கு ஊழியர்கள் தான் இந்த வேலை நீக்க அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்பட உள்ளனர் என கூறியுள்ளது. குறிப்பாக தங்கள் நிறுவனத்தில் கன்டென்ட் மாடரேஷன் பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் தற்போது செயற்கை நுண்ணறிவு வாயிலாகவே தங்கள் செயலியில் கன்டென்ட் மாடரேஷன் செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதால் அந்த வேலைக்கு மனிதர்கள் தேவையில்லை என இந்த அறிவிப்பினை வெளியிடுவதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு டிக் டாக் நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் அளித்துள்ளது.
டிக் டாக் நிறுவனம் தங்களுடைய கன்டென்ட் மாடரேஷன் மாடல் நடைமுறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் தங்களுடைய நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்து வருகிறது. தங்கள் செயலில் உள்ள கன்டன்டுகளை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் மனிதர்கள் ஆகிய இருவரின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து சரி பார்க்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
அதுமட்டுமின்றி டிக் டாக் நிறுவனம் தங்கள் செயலியை மேலும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்து தொழில்நுட்பங்களை மேம்படுத்திருப்பதாக கூறியுள்ளது. தற்போது டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் விதிகளை மீறும் சுமார் 80% வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலமே அகற்றப்பட்ட வருவதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்டது தான் டிக் டாக் செயலி. வீடியோவை அடிப்படையாக கொண்ட இந்த செயலி வியாபார நோக்கங்களுக்காகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு கடும் போட்டியாக டிக்டாக் இருந்து வருகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications