பொதுவாக ஒவ்வொரு நிறுவனங்களிலும் பணி புரியும் தலைமைச் செயல் அதிகாரிகளின் சம்பளம் குறித்து தெரிந்து கொள்வதே ஒரு சுவாரஸ்யம் தான். இது பலருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்று யோசித்ததுண்டா? ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் இவருடைய வருமானம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் தாக்கல் செய்த ப்ராக்ஸி அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் டிம் குக் மொத்த ஊதியமாக 74.6 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு ரூ.7.46 கோடியாகும். 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது கணிசமான அதிகரிப்பு. ஏனெனில் இவர் 2023-ஆம் ஆண்டில் 63.2 மில்லியன் டாலர்களை பெற்றார்.

இந்தத் தொகை மொத்தமாக ஒவ்வொரு விஷயத்தையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக டிம் குக்கின் அடிப்படை சம்பளம் 3 மில்லியன் டாலர். இந்தத் தொகை 2016-ஆம் ஆண்டு முதல் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஊதியத்தில் 58 மில்லியன் டாலர் பங்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 12 மில்லியன் டாலர் அவருடைய செயல் திறன் அடிப்படையில் போனஸ் ஆகவும் பாதுகாப்பு மற்றும் தனியார் விமான பயணம் போன்ற பிற விஷயங்களுக்காக 1.5 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் அடிப்படையிலும் டிம் குக்கின் நலனைக் காக்கவும் அனைத்து வணிகம் சார்ந்த பயணங்கள் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கும் தனியார் விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் போர்டு கமிட்டி தெரிவித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது டிம் குக்கிற்கு வழங்கப்பட்ட பங்குகளில் 75 சதவீத பங்குகள் அவரின் செயல் திறன் அடிப்படையில் வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு நிறுவனத்திற்கென்றும் குறிப்பிட்ட இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகளை அடைந்தால் டிம் குக்கிற்கு இந்த பங்குகள் கொடுக்கப்படும். மீதமுள்ள 25 சதவீத பங்குகள் நேரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் .அதாவது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த பங்குகள் கொடுக்கப்படும்.
2025 ஆம் ஆண்டிற்கு டிம் குக்கின் ஊதிய அமைப்பு குறித்து எந்த வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நம் நாட்டில் ஆப்பிள் பிராண்டுகளை விரும்பி வாங்கும் மக்கள் பலர் உள்ளனர். இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டிம் குக்கின் பங்கு மகத்தானது என்பதை இவருடைய ஊதியம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications