உலகிலேயே பணக்கார கடவுள் என்றால் எல்லோரும் டக்கெனச் சொல்லிவிடுவோம் திருப்பதி ஏழுமலையான் தான், இவரிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி உள்ளது என அதிகப்படியான மக்கள் நம்புகின்றனர். இவரிடம் கொடுக்கக் கொடுக்கத் திருப்பி நமக்கு அள்ளி கொடுப்பாராம், இதனாலேயே பல நிறுவனங்கள், சிறிய வர்த்தகங்கள் ஒரு வருட லாபத்தில் குறிப்பிட்ட பகுதியை திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளது.
இப்படித் திருப்பதி ஏழுமலையானை சுற்றி பல கதைகள் உண்டு, இதனாலேயே மக்கள் கூட்டம் கூட்டமாகத் திருப்பதிக்கு நாள்தோறும் வருவது மட்டும் அல்லாமல் மக்கள் பணத்தை காணிக்கையாகக் கொட்டுகின்றனர். இப்படித் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வாகம் செய்யும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எவ்வளவு தங்கம், வைரம், பணத்தை வைத்துள்ளது தெரியுமா..?

TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் 1.2 டன் தங்க ஆபரணங்கள், 10 டன் வெள்ளி மற்றும் 17,000 கோடி ரூபாய் ரொக்க பணம், 11,255.66 கிலோ தங்கம் என வியக்க வைக்கும் கருவூலத்தைக் கொண்டு உள்ளது.
இதேபோல் TTD வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி தங்கம், வெள்ளி, பணம் என அதிர்ச்சியூட்டும் வகையில் செல்வத்தை வைத்திருக்கும் நிலையில் 6,000 ஏக்கர் வன நிலம், இந்தியா முழுவதும் கோவில் நிலம் என எண்ணில் அடங்கா சொத்துக்களையும் வைத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது சொத்துக்களின் பெரும்பாலான பகுதியை வங்கிகளின் டெபாசிட்டாகவும், லாக்கரிலும் பாதுகாப்பாக வைத்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்குத் திருப்பதி ஏழுமலையான் அருள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக TTD பல இடத்தில் கோவில்களைக் கட்டியுள்ளது. சமீபத்தில் கேதார்நாத்-ல் புதிய கோவில்-ஐ திறந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையானின் சொத்துக்களைப் பாதுகாப்பது என்னவோ வங்கிகளும், பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தாலும் ஆகம விதிகள் படி ஏழுமலையானின் சொத்துக்களைப் பாதுகாப்பது கோவில் வாசலில் இருக்கும் ஷங்க நிதி மற்றும் பத்ம நிதி என்ற இரு காவல் தெய்வங்கள் தான்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ஷங்க நிதி மற்றும் பத்ம நிதி தெய்வ சிலைகள் கோவிலின் முன்பு உள்ளது. இன்றும் இவ்விரு தெய்வங்களுக்குப் பல பூஜைகளும், மரியாதைகளும் செய்வது வழக்கமாகக் கொண்டு உள்ளது TTD.


Click it and Unblock the Notifications