தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் அனைத்து மாவட்டத்திலும் பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமான மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாகத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர்களின் தேவைக்கு அடிப்படையில் சென்னை தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் முதலீடு செய்யத் தீவிரமாகப் பரிந்துரைத்து வருகிறது.
இதன் மூலம் கடந்த 10 வருடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல புதிய முதலீடுகள் குவிந்தது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்கள் தனது உற்பத்தியைத் துவங்கி பலருக்கும் வேலைவாய்ப்புகள் அளிக்கத் துவங்கியுள்ளது. இந்த வேகமான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார் முதல்வர் முக.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தொழிற் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இரண்டு புதிய சிப்காட் தொழிற் பூங்காக்களை நிறுவுவதாக இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்புதிய சிப்காட் தொழிற்பூங்கா நாங்கூநேரி மற்றும் மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த இரு சிப்காட் தொழிற்பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி பகுதியில் மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில் சுமார் 2291 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டு ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதோடு, மூலக்கரைப்பட்டி பகுதியில் 1060 ஏக்கர் தரிசு நிலத்தில் மற்றொரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தற்போதுள்ள கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் போதுமான இடம் இல்லாத காரணத்தால் பெரிய நிறுவனங்கள் வருவது பிரச்சனையாக உள்ளது. கங்கைகொண்டான் சிப்காட் திறன் மிகை அடைந்துள்ளதால் இந்த புதிய பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்டான் சிப்காட்-ல் டாடா பவர் சோலார், விக்ரம் சோலார் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருவதால், இதில் நில கையிருப்பு போதுமானதாக இல்லை.
புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவதால், திருநெல்வேலி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் தொழில் முனைவோர்களுக்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதுடன், தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவி, வரி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகிறது. இந்த புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவதால், திருநெல்வேலி மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications