தமிழ்நாட்டில் டாடா பவர் ரெனூவபிள் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான TP Solar, பல மாதங்களாகத் திருநெல்வேலியில் கட்டப்பட்டு வந்த சோலார் செல் மற்றும் சோலார் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலை இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய நவீன உற்பத்தி தொழிற்சாலை 2 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் செல் தொழிற்சாலையாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 வருடத்தில் பல தரப்பட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எனர்ஜி, மாற்று எரிபொருள் சார்ந்த முதலீடுகள் அதிகமாகக் குவிந்துள்ளது. இந்த முதலீடுகள் இப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும் பகுதி வகிக்கிறது.

இதுகுறித்து TP Solar வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், திருநெல்வேலியில் அமைந்துள்ள இத்தொழிற்சாலை ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள நாட்டின் மிகப்பெரிய சோலார் செல் மற்றும் மாடியூல் தொழிற்சாலையாகும். இன்று இத்தொழிற்சாலையில் சோலார் செல் உற்பத்தி தொடங்கி, இந்த ஆண்டின் முடிவிற்குள் சோலார் மாடியூல் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சோலார் மாடியூல் என்பது சோலார் செல்கள் இணைக்கப்பட்டு மாடியூல் ஆகும்.
தற்போது 2 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை மூலம், இந்தியாவில் தற்போது அதிகப்படியான டிமாண்ட் கொண்ட உயர்தர, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோலார் உதிரிப்பாகங்களின் தேவையைப் பூர்த்தி செய்து, அதிகப்படியான வர்த்தகத்தையும் லாபத்தையும் டாடா பவர் பெற உள்ளது.

இந்த தொழிற்சாலை அடுத்த 4-6 வாரங்களில் கூடுதலாக 2 ஜிகாவாட் உற்பத்தி திறனைச் சேர்க்கும் வகையில் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த சில மாதங்களில் உச்ச உற்பத்தியை நிலையை இத்தொழிற்சாலை எட்டும்.
சுமார் 4.3 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திருநெல்வேலி தொழிற்சாலை 2023 அக்டோபரில் செயல்படுத்தப்பட்டது, இத்தொழிற்சாலையில் இன்று வரை 1250 மெகாவாட் அளவிலான சோலார் மாடியூல்களை உற்பத்தி செய்துள்ளது.

டாடா பவர் இந்த தொழிற்சாலையை சுமார் 4,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ளது. 2023 செப்டம்பரில், அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி நிதி கழகத்திடமிருந்து 425 மில்லியன் டாலர் நிதியுதவி பெற்று இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சோலார் மாடியூல் முதலில் தனது சொந்த தேவைக்காகப் பயன்படுத்தப்படும், அதைத் தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கும் வேளையில் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய உள்ளது.



Click it and Unblock the Notifications