சென்னையில் மிக்ஜாம் புயலுக்கு இணையாக தென் தமிழ்நாட்டில் தற்போது கடுமையான மழை பெய்து வருவது மட்டும் அல்லாமல் பல இடத்தில் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளதை கண்டு கண்ணீருடன் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பது மட்டும் அல்லாமல் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் மக்கள் தற்போது அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் விஷயம், தங்களுடைய வாகனங்கள் தான். அனைத்து வீட்டிலும் ஒரு பைக் ஆவது இருக்கும், இப்படியிருக்கும் சூழ்நிலையில் அனைத்து மக்களையும் பாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது கார், பைக் தான்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல லட்சம் கார், பைக், சரக்கு வாகனங்கள் என வித்தியாசம் இல்லாமல் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் உங்கள் கார், பைக் சைலென்சர் தாண்டி இன்ஜின் வரையில் மழைநீரில் மூழ்கியிருந்தால் இதை மட்டும் செய்து விடாதீர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிறுக சிறுக கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் வாங்கிய கார், பைக் மழை வெள்ளத்தில் மூழ்கியதைப் பார்க்கும் போது யாராக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் இத்தகைய சூழ்நிலையில் தான் நிதானமாகவும், பொறுப்புடனும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
மழை நீரில் மூழ்கிய காரை பதட்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்வது தான் பெரும்பாலான மக்கள் செய்யும் முக்கியமான தவறு. மழை நீரில் மூழ்கிய கார் அல்லது பைக்-ல் இன்ஜின் வரையில் மழைநீர் சென்று இருக்கும், இத்தகைய சூழ்நிலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் கட்டாயம் வாகனத்தின் எஞ்சினை சேதப்படுத்தும்.
அப்படி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து இன்ஜின் சேதம் அடைந்தால் அதற்குக் கார் அல்லது பைக் இன்சூரன்ஸ் கீழ் கிளைம் செய்ய முடியாது. கிளைம் செய்ய முடியாவிடில் அனைத்து செலவுகளை நீங்கள் உங்கள் கையில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை வரும். ஏற்கனவே மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ள நிலையில், வாகன செலவு பெரும் சுமையாக மாறிவிடும்.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் உங்கள் கார் அல்லது பைக்-ஐ காப்பாற்ற வேண்டும் என்றாலோ, பெரும் செலவுகளை தவிர்க்க வேண்டும் என்றாலோ நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, நீரில் மூழ்கிய காரின் புகைப்படம், காரில் சேதமடைந்த பகுதியை புகைப்படம் எடுத்து ஆவணமாக சேகரிப்பது தான்.
இந்தப் புகைப்படம் இன்சூரனஸ் க்ளைம் செய்யும் போது ஆவணமாகச் சமர்பிக்கவும், இதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எளிதாகப் பிராசஸ் செய்யவும், இன்சூரன்ஸ் கிளைம் பணியில் ஏதேனும் பிரச்சனை வரும் பட்சத்தில் ஆதாரமாகக் காட்டி அப்ரூவல் பெறுவது எளிதாகும். இதனால் இந்த மோசமான சூழ்நிலையில் வாகனத்திற்காக செலவை குறைப்பது மட்டும் அல்லாமல் இன்ஜின் கோளாறு-ஐ தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications