இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் முக்கிய வர்த்தக பிரிவான டைட்டன் நிறுவனம், அதன் 40 ஆண்டு கால வரலாற்றில் நான்காவது முறையாக புதிய சிஇஓ-வை தேடும் பணியில் இறங்கியுள்ளது.
டைட்டன் நிறுவனம் தமிழ்நாடு அரசும், டாடா குழுமமும் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனம். 1984ல் வாட்ச் தயாரிப்பதற்காகத் தமிழ்நாடு அரசின் TIDCO மற்றும் டாடா குழுமம் இணைந்து ஓசூரில் மாபெரும் தொழிற்சாலை கொண்டு ஆரம்பமானது.

வெறும் வாட்ச் தயாரிப்பு நிறுவனமாகத் துவங்கி டைட்டன் தற்போது வாட்ச் மட்டும் அல்லாமல் தனிஷ்க் பிராண்டின் நகைகள், ஸ்கின் பிராண்டின் கீழ் பர்பியூம், ஐபிளஸ் பிராண்டின் கீழ் மூக்கு கண்ணாடி என பல லைப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
சுமார் 2.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான டைட்டன் நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் TIDCO சுமார் 27.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இது டாடா சன்ஸ் இந்நிறுவனத்தில் வைத்துள்ள 25.02 சதவீத பங்குகளை காட்டிலும் அதிகமாகும். சமீபத்தில் Taneira என்ற பிராண்டின் கீழ் டாடா குழுமம் இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்ய துவங்கியது.
இந்த நிலையில் டைட்டன் நிறுவனத்தில் 40 ஆண்டு கால வரலாற்றில் அதன் மூன்றாவது தலைமை செயல் அதிகாரி பதவி விலகும் காலம் நெருங்கி வருவதையடுத்து 4வது சிஇஓ-வை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமை செயல் அதிகாரர் சி.கே.வெங்கட்ராமனுக்குச் சமீபத்தில் டைட்டன் நிர்வாகம் 14 மாத கால பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது பதவிக்காலம் டிசம்பர் 2025 வரை நீடிக்கும்.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பதவியேற்ற வெங்கட்ராமன், அடுத்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி 65 வயது ஓய்வூதிய வயதை அடைய உள்ளார். இதனால் இவர் பதவி விலகும் முன்னர் புதிய சிஇஓ தேர்வு செய்யப்படுவது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் தலைமை மாற்றத்தை மேற்பார்வையிட டிசம்பர் 2025 வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டைட்டன் நிறுவனம் தற்போது புதிய சிஇஓ-வை நிறுவனத்திற்குள்ளேயே தேர்வு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, நகை பிரிவின் தலைமை செயல் அதிகாரியான அஜாய் சாவ்லா, கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகள் பிரிவை வழிநடத்தும் சுபர்ணா மித்ரா, மற்றும் கண் பராமரிப்பு பிரிவின் தலைமை செயல் அதிகாரி சௌமன் பவுமிக் ஆகியோரை டைட்டன் நிறுவனத்தின் 13 உறுப்பினர் கொண்ட இயக்குநர் குழுவினால் கண்டறியப்பட்டு உள்ளனர்.
அடுத்த சில மாதங்களில், யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதையும், நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு யார் சரியான நபர் என்பதை ஆலோசனை செய்து டைட்டன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் கடுமையான மதிப்பீட்டுக்கு பின் முடிவு செய்யப்படும்.


Click it and Unblock the Notifications