சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025 - 26 ஆம் நிதி ஆண்டிலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு பட்ஜெட்டில் 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் கலைஞரின் கனவு இல்லம் திட்டம். அனைவருக்கும் வீடு என்ற கணக்கெடுப்பின் வழியாக தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 8 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக அரசு கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடைவதற்காக வரக்கூடிய 2030 ஆம் ஆண்டுக்குள் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

அதன்படி 2024 -25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலேயே கலைஞர்க கனவு இல்லம் திட்டம் அறிவிக்கப்பட்டு 1 லட்சம் வீடுகள் கட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடி ஆகும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை பொறுத்த வரை மக்களிடையே நல்ல வரவைப்பை பெற்ற திட்டமாக பார்க்கப்படுகிறது. ஒரு வீடு கட்ட 3.5 லட்சம் ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024- 25 ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதி ஆண்டிலும் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இந்த பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு வரை 2 லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த கிராமத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. இந்த திட்டத்துக்கான பயனாளிகளை ஊராட்சி மன்ற தலைவர் ,ஊராட்சி உதவி பொறியாளர், வட்டார பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் தேர்வு செய்கின்றன.
தமிழ்நாட்டில் குடிசைவாசிகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் பணி 1975 ஆம் ஆண்டு முன்னோடி முயற்சியாகத் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' 2010 இல் தொடங்கப்பட்டது. அதனை மேலும் மேம்படுத்தி கலைஞர் கனவு இல்லம் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications