சென்னை: தமிழ்நாட்டில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்படி பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சுமார் 50 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் தந்தை மற்றும் தாய் என இருவரையுமே இழந்து உறவினர்களின் பராமரிப்பில் வளர்கின்றனர். இவர்களுக்கு உரிய பராமரிப்பு, கல்வி பயில்வதற்கான பாதுகாப்பும் கிடைப்பதை உறுதி செய்ய மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இவர்கள் 18 வயதை பூர்த்தி செய்யும் வரை இந்த திட்டத்தின் கீழ் 2,000 ரூபாயை பெறலாம்.
இந்த மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிப் படிப்பை தொடர 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே முதல்வரின் தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியானது.
ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் ஏழை குடும்பங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.


Click it and Unblock the Notifications